தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இங்குள்ள அரசு மருத்துவமனையில், இரவு நேர டாக்டர், பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
தொண்டாமுத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை, ஆங்கிலேயர் காலத்தில் துவங்கப்பட்டு, தற்போதும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு, 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 60 உள்நோயாளிகளும் நாள்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், இரவு நேரங்களில் டாக்டர் இல்லாததால், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காத நிலை இருந்தது.
இதனால், இரவு நேர டாக்டர் நியமிக்க வேண்டும் என நமது நாளிதழில், தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டு வந்தது. தற்போது, சுகாதாரத்துறை சார்பில், 24 மணி நேர பணி அடிப்படையில், தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில், இரவு நேரங்களிலும், டாக்டர் பணியில் அமர்த்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியுள்ளது.
பொறுப்பால் வரும் சிக்கல்
தற்போது தொண்டாமுத்தூர் மருத்துவமனை டாக்டர்கள் பற்றாக்குறையால், மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவனையில் உள்ள டாக்டரையும் இங்கு, கூடுதல் பொறுப்பாக நியமித்து, இரவு நேர பணியில் அமர்த்துகின்றனர்.
இதனால், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சியிலும் ஒரு டாக்டர் பற்றாக்குறை ஏற்படும்.
இதனால், அங்கும் நோயாளிகள், டாக்டர் இல்லாமல் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.
எனவே, டாக்டர்கள் அதிகமுள்ள மருத்துவமனையில் இருந்து, கூடுதலாக உள்ள டாக்டரை, இங்கு பணியிட மாற்றம் செய்தால், இத்திட்டம் தங்கு தடையின்றி செயல்படுத்த முடியும் என்பதையும், சுகாதாரத்துறை கருத்தில் கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.