தைரியமாக புகார் அளிக்க மாணவிகள் முன்வர வேண்டும்

0
138

பாலியல் தொல்லை இருந்தால் தைரியமாக புகார் அளிக்க மாணவிகள் முன்வர வேண்டும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் அறிவுறுத்தினர்.

விழிப்புணர்வு கூட்டம்

பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் போலீஸ் நிலையத்தில் எப்படி புகார் தெரிவிப்பது என்று போலீசாரிடம் மாணவிகள் கேட்டறிந்தனர். இதில் தனிபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திருமலைசாமி, சப்-இன்ஸ்பெக்டர் (பயிற்சி) அக்பர் அலி, ஆசிரியைகள் அந்தோணி ராஜாத்தி, இந்திராராணி, மோகனா மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

அதிக வழக்கு பதிவு

முன்னதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் பேசும்போது கூறியதாவது:-

பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளதால் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். மாணவிகள் பள்ளிக்கு வரும்போதோ அல்லது மற்ற இடங்களிலோ பாலியல் தொல்லை உள்பட ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் போலீசில் தைரியமாக புகார் கொடுக்கலாம். மேலும் 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்டுரை போட்டி

இதேபோன்று மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்திலும் மாணவ-மாணவிகளுக்கு போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் சரக அளவில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான சீண்டல்கள், தொந்தரவுகள், அன்றாட வாழ்கையில் போலீசாரின் பங்கு, குழந்தைகளுக்கு எதிரான சீண்டல்களின் காரணங்கள், தாக்கங்கள், ஏன் போலீசார் உங்கள் நண்பன் என்ற தலைப்பில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வார்கள்.

பின்னர் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு போலீஸ் சூப்பிரண்டு பரிசுகளை வழங்குவார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.