தைப்பூசத்தை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு ரயில்

0
5

கோவை; தைப்பூசத்தை முன்னிட்டு, கோவை – திண்டுக்கல் இடையே, நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

பிப்., 11 அன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு முருகக்கடவுளின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான, பழனிக்கு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் செல்வது வழக்கம்.

இவர்களின் வசதிக்காக கோவை – திண்டுக்கல் இடையே சிறப்பு மெமு ரயில், நாளை முதல், பிப்., 14 வரை(ஞாயிறு தவிர) இயக்கப்பட உள்ளது.

இதன்படி, கோவை – திண்டுக்கல்(06106) சிறப்பு மெமு ரயில், கோவையிலிருந்து காலை 9:35 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1:10 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், திண்டுக்கல் – கோவை(06107) சிறப்பு மெமு ரயில் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு, மாலை 5:50 மணிக்கு கோவை வந்தடையும்.

சிறப்பு மெமு ரயிலில், எட்டு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.