தேனி மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. கலெக்டர் பல்லவி பல்தேவ் இந்த பட்டியலை வெளியிட்டார். அதன்படி தேனி மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 43 ஆயிரத்து 966 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 5 லட்சத்து 15 ஆயிரத்து 267 பேர், பெண்கள் 5 லட்சத்து 28 ஆயிரத்து 547, மூன்றாம் பாலினத்தவர்கள் 152 பேர் உள்ளனர். ஆண்களை விட பெண்கள் 13 ஆயிரத்து 280 பேர் அதிகம் உள்ளனர்.
வரைவு பட்டியலை வெளியிட்ட பின்பு கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறுகையில், ‘1–1–2019–ந்தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் இன்று (நேற்று) முதல் தொடங்கப்படுகிறது. அக்டோபர் 31–ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பணிகள் நடக்கிறது. மேலும், வருகிற 9–ந்தேதி, 23–ந்தேதி, அடுத்த மாதம் 7–ந்தேதி, 14–ந்தேதி ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக விண்ணப்பிக்கலாம்’ என்றார்.