தேசிய பளு துாக்கும் போட்டி: 82 வயது வீராங்கனைக்கு தங்கம்

0
8

பொள்ளாச்சி : கோவை மாவட்டம், பொள்ளாச்சி முத்துகவுண்டர் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கட்ராமன் – கிட்டம்மாள் தம்பதி. இவர்களது, பேரன்கள், தேசிய அளவிலான பளு துாக்கும் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்றனர். இதனால், 80வயதை கடந்த கிட்டம்மாளுக்கும் பளு துாக்கும் போட்டியில் சாதிக்க ஆர்வம் துாண்டியது.

அதன்பேரில், உடற்பயிற்சி கூடத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டார். அதன்பேரில், கடந்தாண்டு, கோவையில், ‘இந்தியன் பிட்னஸ் பெடரேஷன்’ சார்பில் நடந்த தேசிய அளவிலான, பளு துாக்கும் போட்டியில் முதன்முறையாக பங்கேற்று, 5ம் இடம் பிடித்தார்.மேலும், ‘ஸ்ட்ராங் மேன் ஆப் சவுத் இந்தியா 2024’ என்ற பட்டத்தையும் பெற்றார்.

இந்நிலையில், கடந்த, 4 மற்றும் 5ம் தேதி, டில்லியில் நடந்த, ‘நேச்சுரல் ஸ்ட்ராங் பவர் லிப்டிங் பெடரேசன்’ சார்பில் பளு துாக்கும் போட்டியில் பங்கேற்றார். மூத்தோருக்கான, 50 கிலோ எடைப் பிரிவில் முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றார்.

இது குறித்து கிட்டம்மாள் கூறுகையில், ”உடல் ஆரோக்கியத்தை காக்கும் வகையில் கம்பங்கூழ், காய்கறி சூப், பேரிச்சம்பழம் என, ஊட்டச்சத்து உணவகளை எடுத்துக் கொள்கிறேன். பேரக்குழந்தைகளை பார்த்து எனக்குள் இந்த ஆர்வம் ஏற்பட்டது.

பயிற்சியும், முயற்சியும் இருந்ததால், சாதிக்க முடிந்தது. இதுவரை, கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த, 4 போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன். தற்போது, டில்லியில் நடந்த போட்டியில் தங்கம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.