தேசிய அளவிலான குவான் கிடோ போட்டி: 18 பதக்கம் குவித்த கோவை மாணவர்கள்

0
7

கோவை, ஜன. 10: மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் 6வது தேசிய அளவிலான குவான்கிடோ சாம்பியன்ஷிப் போட்டி சமீபத்தில் நடந்தது. இதில், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா, சண்டிகர் உள்பட 28 மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். பைட்டிங், குவான், வெப்பன் என மூன்று பிரிவுகளின்கீழ் இப்போட்டி நடந்தது.

இதில், தமிழக அணி சார்பில் கோவையை சேர்ந்த கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி அரசு பள்ளி மாணவிகள் உள்பட 7 பேர் பங்குபெற்றனர். கடுமையான சவால்களுக்கு மத்தியில் தங்களது திறமைகளை வெளிக்காட்டிய இவர்கள் 6 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்று அசத்தினர். நேற்று கோவை திரும்பிய இவர்களுக்கு, பீளமேடு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர் சதீஷ் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கோவைக்கு பெருமை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிகிறது.