பொள்ளாச்சி: தென்னையில் அடுத்தடுத்த நோய் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை, விவசாயிகள் வெட்டி சாய்த்து வருகின்றனர். மரங்களை காப்பாற்ற வேறு வழியே இல்லாததால், செய்வதறியாமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
தென்னை நகரம்’ என அழைக்கப்படும் பொள்ளாச்சியின், இளநீருக்கும், தேங்காய்க்கும், வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் தனி மவுசு உள்ளது. ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களினால், மற்ற சாகுபடியை கைவிட்ட விவசாயிகள், தென்னை சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு உற்பத்தியாகும் தேங்காய், கொப்பரை களங்களில் கொப்பரை உற்பத்தி செய்து காங்கேயம் மார்க்கெட்டுக்கு அனுப்பப்படுகின்றன.
தேங்காய், கொப்பரை மட்டுமின்றி, மட்டைகள் தென்னை நார் தயாரிக்கவும், தேங்காய் சிரட்டையில் கார்பன் தயாரிக்கவும் அனுப்பப்படுகின்றன.
தேங்காய், கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் பலன் பெற்றனர். இந்நிலையில், தென்னை விவசாயத்தில் தொடரும் பிரச்னைகளினால், விவசாயிகள் மீளாத்துயரில் ஆழ்ந்துள்ளனர்.
அடுத்தடுத்த பாதிப்பு
தென்னை மரங்கள், சிவப்பு கூண் வண்டு, காண்டாமிருக வண்டு பாதிப்பு, இலைகருகல், அழுகல் நோய், வெள்ளை ஈ, கேரளா வாடல் நோய், குருத்து கட்டை, சாறு வடிதல், பென்சில் கூம்பு உள்ளிட்ட நோய் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த, இரு ஆண்டுகளுக்கு மேலாக, வெள்ளை ஈ தாக்குதல், கேரளா வாடல் நோயினால் மரங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றன. மரங்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.
வேளாண் துறை பரிந்துரை செய்யும் வழிமுறையை கடைபிடித்தாலும், நோயை கட்டுப்படுத்த முடியாததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வேறு வழி தெரியாமல் தென்னை மரங்களை வெட்டி சாய்த்து வருகின்றனர்.
அதில், ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், அம்பராம்பாளையம், மண்ணுார் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. இதனால், தென்னை நகரின் அடையாளம் மறைந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
கடன் சுமை
விவசாயிகள் கூறியதாவது:
தென்னை மரங்கள் அடுத்தடுத்து நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு கடும் வறட்சி, நிலையில்லாத விலை என அடுக்கடுக்கான பிரச்னைகளில் இருந்து மீள முடியாத சூழல் உள்ளது.
பல ஆண்டுகள் வளர்த்த தென்னை மரங்களை வெட்டி சாய்ப்பது தான் தீர்வாக அமைந்துள்ளது. தென்னையில் வருமானம் இல்லாமல் கடன் சுமை அதிகரிப்பதால், மரங்களை வெட்டி அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு கடனை அடைக்க முயற்சிக்கிறோம்.
இதற்கு அரசு ஒரு குழு அமைத்து, தென்னை விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
கோரிக்கை நிறைவேறுமா?
தென்னை விவசாயிகள், மரங்களை காக்க கோரிக்கை விடுத்தால் அதற்குரிய தீர்வு இல்லை. மரங்களை வெட்டி அகற்ற கொடுத்த தொகையும் பற்றாக்குறையாக உள்ளது. தேங்காய் எண்ணெய் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை நிறைவேற்றவில்லை.விவசாயிகளின் எதிர்ப்பை சமாளிக்க, ரேஷன் கடைகளில், பாமாயில் வேண்டுமா, தேங்காய் எண்ணெய் வேண்டுமா என பெயரளவு கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், எந்த பயனும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.தற்போது, தேங்காய்க்கு விலை உயர்ந்தாலும், எடை குறைவு மற்றும் இருப்பு இல்லாததால் முழு பலனை விவசாயிகள் அனுபவிக்க முடியாத நிலை உள்ளது. தென்னை விவசாயிகளின் நலன் காக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், பொள்ளாச்சியின் அடையாளம் மறைந்து விடும்.