கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைககுளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை கிணத்துக்கடவில் இருந்து கொண்டம்பட்டி செல்லும் சாலையில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று மதியம் வழக்கம்போல் தென்னை நார் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வந்தது. அப்போது தென்னை நார் பிரித்து எடுக்கும் எந்திரத்தில் இருந்து திடீரென தீப்பிடிக்க தொடங்கியது. இதனையடுத்து அங்கு பணியில் இருந்தவர்கள் வெளியே ஓடிவந்தனர். இதனையடுத்து உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த தீ மளமளவென பிடித்து, தென்னை நார் தயாரிக்கும் எந்திரங்கள் மீது பரவியது. இதுகுறித்து கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அதிகாரி அதிகாரி தங்கராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் தீயில் எரிந்து நாசமானது.