கிணத்துக்கடவு; மதுரை — கோவை ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டுமென, ரயில் பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.
கோவையில் இருந்து, தனுஷ்கோடிக்கு 100 ஆண்டுகளுக்கு முன் ரயில் சேவை துவங்கப்பட்டது. இதில் பயணியர் பலர் பயணித்து வந்தனர். 1964ம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த ஆண்டு முதல் தனுஷ்கோடியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு, ராமேஸ்வரம் வரை இயக்கப்பட்டது.
கடந்த, 1964 முதல் 2002 வரை கோவை — ராமேஸ்வரம் ரயில் இயக்கப்பட்டது. அதன் பின் இதே ரயில், 2002 முதல் 2006 வரை திண்டுக்கல் முதல் போத்தனூர் வரை இயக்கப்பட்டது. அப்போது இந்த ரயில் பாதை மீட்டர் கேஜ் ஆக இருந்தது.
அதன் பின், மீட்டர் கேஜில் இருந்து பிராட் கேஜாக ரயில் பாதை மாற்றம் செய்யப்பட்டது. இதில், முதற்கட்டமாக திண்டுக்கல் முதல் பழநி வரை 2012ம் ஆண்டிலும், பழநி முதல் பொள்ளாச்சி வரை 2014ம் ஆண்டிலும், பொள்ளாச்சி முதல் பாலக்காடு வரை 2015ம் ஆண்டு இறுதியிலும், பொள்ளாச்சி முதல் போத்தனூர் வரை 2017ம் ஆண்டும் பிராட் கேஜ் ஆக மாற்றம் செய்யப்பட்டது.
அதன் பின், 2017ம் ஆண்டு முதல் இந்த ரயில் பாதையில் பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, மதுரை — கோவை இடையே தினசரி ரயில் ஒரு முறை இயக்கப்படுகிறது. இந்த ரயிலை, மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளன
கடந்த, 2021ம் ஆண்டு, சேலம் ரயில்வே கோட்டத்தின் சார்பில், மதுரை — ராமேஸ்வரம் இடையே இரவு ரயில் இயக்க வேண்டுமென, தென்னக ரயில்வேக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இதேபோன்று, மதுரை கோட்டத்திலும், மதுரை — கோவை மற்றும் கோவை — ராமேஸ்வரம் என இருந்த இரண்டு ரயிலை, மதுரை — ராமேஸ்வரம் என ஒரே ரயிலாக இயக்க வேண்டுமென தென்னக ரயில்வேக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.
நூறாண்டுகளுக்கு முன் இருந்த சேவை தற்போது இல்லை. எனவே, இந்த சேவையை மீண்டும் துவக்க வேண்டுமென ரயில் பயணியர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கிணத்துக்கடவு ரயில் பயணியர் சங்கத்தினர் கூறியதாவது:
மதுரை – கோவை இடையே செல்லும் ரயிலில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ரயிலை மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்தால், கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ரயில் பயணியர் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.
மேலும், ராமேஸ்வரம் முதல் மதுரை வரை ஏராளமான ஆன்மிக தலங்கள் உள்ளதால் அதிகளவு பயணியர் வந்து செல்வார்கள். தொடர்ந்து பயணியர் பலர் வணிக நோக்கத்துடனும் பயணம் மேற்கொள்வர்.
தற்போது, தினசரி கோவையில் இருந்து ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான பயணியர் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, கோவை – மதுரை – ராமேஸ்வரம் ரயிலை இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.