துப்பாக்கி குண்டுப்பட்டு விவசாயி படுகாயம்- டாக்டர் மீது வழக்கு பதிவு

0
66

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் (வயது 50). விவசாயி. இவரது அண்ணன் சென்னையை சேர்ந்தவர் டாக்டர் செல்வமுத்துகுமார் (52). உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக பொள்ளாச்சிக்கு வந்த அவர் தம்பி வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை மீனாட்சிசுந்தரம் தனது வீட்டில் இருந்த துப்பாக்கியை (ஏர்கன்) சுத்தப்படுத்தியதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த செல்வமுத்துக்குமார் துப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது என்று கேட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து மீனாட்சி சுந்தரம் அண்ணனுக்கு துப்பாக்கியை பயன்படுத்துவது கொடுத்து சொல்லி கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியை செல்வம் முத்துக்குமார் அழுத்தியதால் அருகில் இருந்த மீனாட்சிசுந்தரத்தின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் செல்வ முத்துக்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.