கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சொக்கனூர் அரசு துணை சுகாதார நிலையத்தில், செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
சொக்கனூர், பொட்டையாண்டிபுறம்பு, வடபுதூர், கல்லாபுரம் ஊராட்சிகளில் உள்ள மக்கள், உடல் உபாதைகள், காய்ச்சல், சளி போன்றவைகளுக்கு சொக்கனூரில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.
இந்த சுகாதார நிலையத்தில், ஒரு டாக்டர், நான்கு செவிலியர்கள் மற்றும் ஒரு மருந்து வழங்கும் பணியாளர் பணியில் இருந்தனர். தற்போது, ஒரு டாக்டர், இரண்டு செவிலியர்கள் மட்டுமே உள்ளனர்.
இங்குள்ள மருந்து வழங்கும் பணியாளர் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே வருகிறார். மற்ற நாட்களில், வடசித்தூர் மற்றும் நல்லட்டிபாளையம் சுகாதார நிலையங்களுக்கு செல்கிறார்.
இதனால், சுகாதார நிலையம் வரும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பிணிகளும் நீண்ட நேரம் காத்திருப்பதால் அவதிக்குள்ளாகின்றனர். சிலர், இந்த சுகாதார நிலையத்துக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். மேலும், இரவு நேரத்தில் டாக்டர் இல்லாததால், மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதனால், கிணத்துக்கடவு அல்லது கோவை போன்ற இடங்களுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி, கூடுதல் செவிலியர்கள் பணியமர்த்தி, சுகாதார நிலையத்தில் இரவிலும் டாக்டர் இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.