அஜித்குமாரின் விஸ்வாசம், சூர்யாவின் என்.ஜி.கே ஆகிய படங்களையும் தீபாவளிக்கு கொண்டுவர திட்டமிட்டனர். ஆனால் விஸ்வாசம் படப்பிடிப்பின்போது திரையுலகினர் வேலை நிறுத்தம் செய்ததால் படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு தள்ளிப்போய் உள்ளது.
இது அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. சூர்யாவின் என்.ஜி.கே படப்பிடிப்பும் டைரக்டர் செல்வராகவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சில வாரங்கள் முடங்கியது. இதனால் அந்த படமும் தீபாவளி போட்டியில் இருந்து விலகிக்கொண்டது. இவற்றுக்கு பதிலாக தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கவுதம் மேனன் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடந்து வந்தது. படம் எப்போது வெளியாகும் என்று கவுதம் மேனனிடம் சமூக வலைத்தளத்தில் தனுஷ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தீபாவளிக்கு வெளியாகும் என்று இப்போது பதில் அளித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.
இந்த படங்களுடன் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள ‘பில்லா பாண்டி’ படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விக்ரமின் சாமி இரண்டாம் பாகம் படத்தை இந்த மாதம் இறுதியில் திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. விஷாலின் சண்டக்கோழி இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.