தீக்குளிக்க டீசலுடன் வந்த பெண்ணால் பரபரப்பு

0
77

கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிக்க டீசல் பாட்டிலுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர், திருமணம் செய்வதாக ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

பெண்ணிடம் சோதனை

கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த ஒரு பெண்ணை போலீசார் சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் ஒரு பாட்டில் இருந்தது. அந்த பாட்டிலை போலீசார் திறந்து பார்த்தபோது அதற்குள் டீசல் இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணிடம் இருந்த டீசலை கைப்பற்றியதுடன், அவரை தனியாக அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 30 வயது பெண் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த பெண் போலீசாரிடம் கூறியதாவது:-

நான் பி.பி.ஏ. படித்து உள்ளேன். எனக்கும்,திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்தது. திடீரென்று அந்த நபர் என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். நான் அவரிடம் பேசுவதற்காக பலமுறை அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டேன். ஆனால் பேசமுடியவில்லை. இதையடுத்து நான் அவரை நேரில் சந்தித்து பேச தாராபுரம் சென்றேன்.

கடும் நடவடிக்கை

அப்போது அவரை சந்திக்க விடாமல் தடுத்த உறவினர்கள், அவர்கள் வீட்டில் வளர்த்து வரும் நாயை என்மீது ஏவிவிட்டு என்னை துரத்தினார்கள். இதனால் மனவேதனை அடைந்த நான் கோவை கலெக்டர் அலுவலகம் வந்து தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காகதான் பாட்டிலில் டீசல் வாங்கிக்கொண்டு வந்தேன். நான் உயிருடன் வாழ வேண்டும் என்றால், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியவர் மீதும், அதற்கு காரணமாக இருக்கும் உறவினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.