தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம்

0
96

கோவை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடந்தது. மேயர் கல்பனா தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றிச்செல்வன், ஆணையாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல தலைவர்கள், குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி பேசினார்கள்.

கூட்டத்தில், கோவை மாநகராட்சியில் தூய்மை பணிகள் மற்றும் இதர பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களின் கீழ் வேலை செய்து வரும் ஒப்பந்த பணியாளர்களின் கோரிக்கையான சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக அரசின் அனுமதி வேண்டி கருத்துரு அனுப்பலாம் என்ற சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கவுன்சிலர்கள் வாக்குவாதம்

கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன், மேயர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனது வார்டுக்கு உட்பட்ட ரத்தினபுரி மாநகராட்சி பள்ளியில் 6 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு இருக்கை வசதி இல்லாததால் அவர்கள் கீழே அமர்ந்து படித்து வருவதாகவும், குடிநீர் வசதி இல்லை. இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று கூறினார்.

இதையடுத்து தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் எழுந்து நீங்கள் 10 வருடம் ஆட்சி செய்தீர்கள். அப்போது ஏன் நிறைவேற்றவில்லை என்றுக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மேயர் தலையிட்டு இருக்கையில் அமர்ந்து பேசுங்கள் என்று கூறியதை தொடர்ந்து அவர் இருக்கையில் அமர்ந்தார்.

தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கை குறித்து பேசியதாவது:-

சிங்காநல்லூர் குளம்

இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் (கிழக்கு மண்டல தலைவர்):- சூயஸ் திட்டத்தில் பணிகளை செய்யும்போது பாதாள சாக்கடை இணைப்புகளை உடைத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். மேலும் சில பகுதிகளில் வீடுகளின் முன்பு போடப்பட்டு உள்ள சாய்வுதளம் சாலையை ஆக்கிரமித்த வண்ணம் உள்ளது. சிங்காநல்லூர் குளத்தில் எந்த பணிகளையும் செய்ய தனியார் அமைப்பு தடுப்பதாக புகார் எழுந்து உள்ளது. எனவே அந்த குளத்தில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும்.

மீனா லோகு (மத்திய மண்டல தலைவர்):- மத்திய மண்டல பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் அதை அகற்ற ஒரு வாகனம் மட்டுமே உள்ளது. எனவே கூடுதல் வாகனம் வழங்க வேண்டும்.

மாலதி (கல்விக்குழு தலைவர்):- கோவை தேவாங்கப்பேட்டை பள்ளியில் குடிநீர் தொட்டி, கழிவுநீர் தொட்டி மூடப்படாமல் திறந்து கிடக்கிறது. அதை சரிசெய்யக்கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சுற்றுச்சுவர் இல்லை

மாரிசெல்வன் (சுகாதார குழு தலைவர்):- கோவை 80-வது வார்டில் சூயஸ் குடிநீர்திட்டத்திற்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் பல இடங்களில் அந்த குழியை மூடி சாலை ்அமைக்காததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள் எனவே அதை சரிசெய்யவேண்டும்.

முருகேசன் (தி.மு.க.):- முன்பு கட்டிடம் கட்ட அனுமதி எளிதாக கிடைத்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை. அதிகாரிகளிடம் கேட்டால் சம்பந்தமே இல்லாத 2 நபரை பார்த்துவிட்டு வரும்படி கூறுகிறார்கள். அந்த நபர் மாநகராட்சியில்தான் வேலை செய்து வருகிறாரா? கட்டிட அனுமதி பெற அவரை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளதா என்று விளக்கம் அளிக்க வேண்டும்.

கார்த்திக் செல்வராஜ் (தி.மு.க.):- கோவையில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டு உள்ள தெருப்பெயர் பலகை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பலருக்கு தெருப்பெயர் தெரியாத நிலையில் இருக்கிறது. அத்துடன் கோவை மாநகராட்சி கலையரங்கில் நாடக சபாவை சேர்ந்தவர்கள் நாடகம் நடத்த குறைந்த வாடகையில் கலையரங்கத்தை வழங்க வேண்டும்.

கழிவறையில் துர்நாற்றம்

அலிமா ராஜாஉசேன் (எஸ்.டி.பி.ஐ.):- எனது வார்டு பகுதியில் 10 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது. அதன் அழுத்தம் குறைவாக இருப்பதால் சரியாக வருவது இல்லை. அதுபோன்று தார்சாலை போட இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

சித்ரா வெள்ளியங்கிரி (ம.தி.மு.க.):- மாநகர பகுதியில் மின்விளக்கு இல்லாத பகுதியில் போதை பொருட்கள் விற்பனை படுஜோராக நடக்கிறது. அதை தடுக்க வேண்டும். மக்களை பாடாய் படுத்தும் பாதாள சாக்கடை பணி முடிவது எப்போது என்றே தெரியவில்லை. பஸ்நிலையங்களில் உள்ள கழிவறையை முறையாக சுத்தம் செய்யாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கட்டிட வரைபட அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் 4 மாதங்கள் வரை ஆகிறது. எனவே அதை தவிர்த்து ஒரே மாதத்தில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

கூட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் பேசினர். மேலும் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.