மேட்டுப்பாளையம்; திறமை இல்லாத திறனற்ற அரசு தமிழகத்தில் உள்ளது. ஹிந்துக்களுக்கு இங்கு பாதுகாப்பில்லை, என மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் பேசினார்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை தடுக்க வலியுறுத்தி, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டு முன்பு, ஹிந்து முன்னணி, பா.ஜ., ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு ஹிந்து இயக்கங்கள் சார்பில் வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் பேசுகையில், பாகிஸ்தானிடம் இருந்து 1971ல் போர் நடத்தி, நம் ராணுவம் வங்கதேசத்திற்கு விடுதலை வாங்கி கொடுத்தார்கள். அப்போது முதல் வங்கதேசம் நமக்கு விசுவாசமாக இருந்தார்கள்.
அண்மையில் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்தார்கள். தற்போது அங்கு ஹிந்து கோவில்களை இடிக்கிறார்கள், ஹிந்துக்களை தாக்குகிறார்கள். வங்கதேசம் முஸ்லிம் நாடு என்கிறார்கள். அங்கு ஹிந்துக்கள் வாழ முடியாது. ஹிந்துக்கள் வங்கதேசத்தில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அதற்காக அங்குள்ள இஸ்கான் அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ண தாஸ் சாமியை ஜெயிலில் அடைத்தார்கள்
தேச துரோகம் வழக்கு போட்டுள்ளார்கள். அவரை ஜாமின் எடுக்க வந்த வக்கீலை கோர்ட் வாசலில் வைத்து கொலை செய்கிறார்கள். பாலீஸ்தீன பிரச்னைக்காக திருமாவளவன், கனிமொழி குரல் கொடுத்தார்கள். வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்பட்டதற்கு குரல் கொடுக்கவில்லை. வங்கதேச ஹிந்துக்களை பாதுகாக்க நம் ஹிந்துக்கள் தயாராகிவிட்டனர். திறமை இல்லாத திறனற்ற அரசு தமிழகத்தில் உள்ளது. ஹிந்து விரோத அரசாங்கம், அதிகாரிகள் இங்குள்ளனர். ஹிந்துக்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை. 2026ல் பாடம் புகட்டுவோம், என பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, துணை தலைவர் விக்னேஷ், ஹிந்து முன்னணி மாநில பேச்சாளர் மனோகரன், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அனுமதியின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால், 13 பெண்கள் உட்பட 156 பேரை போலீசார் கைது செய்தனர்.