பொள்ளாச்சி : பொள்ளாச்சி, திரு வள்ளுவர் திடல் எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து, நெரிசல் மிகுந்து காணப்படும் பகுதியில், ரவுண்டானா அமைத்து, வண்ண செடிகள் வளர்த்து அழகுப்படுத்தும் பணியில், நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல், மார்க்கெட் ரோடு வழியாக தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கேரளா மற்றும் ஆனைமலை சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு செல்கின்றன.
மார்க்கெட் ரோடு பகுதிகளில் அதிகளவு வணிக வளாகங்கள், குடோன்கள் உள்ளதால், சரக்கு ஏற்றி வரும் லாரிகளும் அதிகமாக வந்து செல்கின்றன. இந்நிலையில், இப்பகுதியில் கனரக வாகனங்கள் ரோட்டிலேயே நிறுத்தப்பட்டு, சரக்குகள் இறக்கப்படுகின்றன. இதனால், அந்த வாகனங்களை அணிவகுத்து, மற்ற வாகனங்கள் நிற்க வேண்டிய நிலை காணப்பட்டது.
மீன்கரை ரோடு, மார்க்கெட் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், திருவள்ளுவர் திடலில், ‘ரவுண்டானா’ அமைக்கவும், அங்குள்ள சரக்கு வாகனங்கள் நிறுத்தப் பகுதிக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, திருவள்ளுவர் திடலில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, ‘ரவுண்டானா’ அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஆய்வு செய்து அரசிடம் நிதி கோரினர். சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து, மூன்று கோடி ரூபாய் செலவில், திருவள்ளுவர் திடல் சந்திப்பு, மார்க்கெட் ரோடு சந்திப்பு ஆகியவை விரிவாக்கம் செய்து மேம்படுத்தும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றன.
ரோடு விரிவாக்கம் செய்து, ரவுண்டானா, சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரவுண்டானாவை அழகுப்படுத்தும் பணியில், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் வாயிலாக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதில், ரவுண்டானா நடுவே திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு திறப்பு விழாவுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ரவுண்டானாவில் அழகான வண்ண செடிகள், ஹார்ட் வடிவில் செடி என பலவிதமான செடிகள் கண்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ரவுண்டானாவில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளதுடன், வண்ண செடிகள் வைத்து அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ரவுண்டானா முன்மாதிரியாக இருக்கும்,’ என்றனர்.