கோவை மாவட்டத்தில், திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் மூன்று ஆண்டுகளில், 3,564 பேர் பயனடைந்த நிலையில், 352 பேர் விரைவில் பயனடைய உள்ளனர்; 90 பேர் உதவித்தொகைக்கு காத்திருக்கின்றனர்.
தமிழக அரசானது, பெண்கள் அனைவரும் கல்வி கற்கும் நோக்கில், பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கமும் (8 கிராம் தங்க நாணயம்), பட்டம் மற்றும் பட்டய படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம், பத்தாம் வகுப்பு/பிளஸ்2 வரை படித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
அதாவது, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம், ஈ.வெ.ரா., மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள்களுக்கான திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம் என்ற பெயர்களில் செயல்படுத்தப்படுகிறது.
முன்பு இருந்த மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் ‘மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்’ என, மாற்றப்பட்டு, தாலிக்கு தங்கம் வழங்குவதற்கு பதிலாக, அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வி கற்கும் மாணவியருக்கு, மாதம் ரூ. 1,000 வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த, 2021-22ல், பட்டம், பட்டய படிப்பு படித்த, 1,834 பேர் மற்றும் பத்தாம் வகுப்பு/பிளஸ்2 படித்த, 966 பேர் என, 2,800 பெண்களும், 2022-23ல், 208 மற்றும் 12 என, 220 பேர்; 2023-24ல், 401 மற்றும், 143 என, 544 பேர் பயனடைந்துள்ளனர்.
கடந்த நான்கு நிதியாண்டுகளில், 3,564 பேர் பயனடைந்துள்ளனர். 2024-25ல், 352 பயனாளிகளுக்கு தலா, 8 கிராம் தங்கம் ரூ.2 கோடியே, 14 லட்சத்து, 22 ஆயிரத்து, 16 மதிப்பீட்டில் வழங்கப்படவுள்ளது.
தவிர, பட்டம், பட்டயப்படிப்பு படித்த, 286 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் என, ரூ.1 கோடியே, 43 லட்சம் வழங்கப்படவுள்ளது.
பத்தாம் வகுப்பு படித்த, 66 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் என, 16 லட்சத்து, 50 ஆயிரம் என, 352 பேருக்கும் ரூ.1 கோடியே, 59 லட்சத்து, 50 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
சீனியாரிட்டி முறை!
மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா கூறியதாவது:
முன்பு மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் பொதுவாக இருந்ததால் ஒட்டுமொத்தமாக விண்ணப்பித்தனர். அத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, நான்கு திட்டங்களில் தனித்தனியே விண்ணப்பித்து வருகின்றனர்.
இதனால், விண்ணப்பித்த அனைவருக்கும் பெரும்பாலும் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வருவாய் வரம்பு அதிகம் இருந்தும், விண்ணப்பிப்பவர்களுக்கு தான்
நிராகரிக்கப்படுகிறது.
2024-25ல், 90 பேருக்கு தாலிக்கு தங்கம் இன்னும் வழங்க வேண்டியுள்ளது. சில திட்டங்களில் சீனியாரிட்டி அடிப்படையில் வழங்கப்படுவதால் காத்திருக்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
— நமது நிருபர் –