தியானம் என்பது ஞானத்தை தேடும் வழி சொல்லித் தருகிறது ஓவியக் கண்காட்சி

0
6

கோவை பீளமேட்டில் உள்ள கஸ்துாரி சீனிவாசன் ஆர்ட் கேலரியில், ‘ரிதமிக் பேலட்’ என்ற தொடர் ஓவியக் கண்காட்சி நடந்து வருகிறது.

கடந்த, 26ம் தேதி துவங்கிய இந்த ஓவியக் கண்காட்சி, இன்று (30ம் தேதி) வரை நடக்கிறது. இதில் சென்னையைச் சேர்ந்த ஓவியர்கள், ராஜு துர்செட்டிவார் மற்றும் மனிஷா ஆகியோர் வரைந்த 60க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

எதார்த்த பாணியில் வரையப்பட்ட கடவுள் உருவ ஓவியங்கள் மற்றும் நவீன பாணி ஓவியங்கள் என, இரண்டு வகையான ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் ஓவியர் மனிஷாவின் ஓவியங்கள், அனைத்தும் ஆன்மிகம் சார்ந்த உடல் மற்றும் உள் உணர்வு மற்றும் தியானம் சார்ந்த கருத்தை, மையமாக வைத்து வரையப்பட்டுள்ளன.

ஓவியர் மனிஷா கூறுகையில், ”தியானம் என்பது ஞானத்தை தேடும் வழியாகும். ஒவ்வொரு ஓவியங்களுக்கு பின்னாலும், ஒரு புராண கதை இருக்கிறது. இந்து தத்துவ பின்னணி உள்ளது. மனதுக்கும், உடலுக்கும் இடையில் நடக்கும் தர்க்க உணர்வுகளை, இந்த ஓவியங்களில் மறை பொருளாக சொல்லி இருக்கிறேன்,” என்றார்.

ஓவியர் ராஜு துர்செட்டிவார் கூறுகையில், ”நான் ‘ஆப்ஸ்ட்ராக்’ ஓவியங்களைதான் அதிகம் வரைகிறேன். நிழல், ஒளி இவை இரண்டும்தான் என் ஓவியத்தின் கருப்பொருள். என் ஓவியங்களில் நேரடியாக எந்த தரிசனமும் இருக்காது.

பார்வையாளர்கள் தங்களின் மன ஓட்டம் மற்றும் ரசனை அடிப்படையில், ஓவியங்களை பார்த்து ரசிக்கலாம்,” என்றார்.

இந்த ஓவியக் கண்காட்சி, இன்றுடன் நிறைவடைகிறது. காலை, 10:00 முதல் மாலை 5:00 மணி வரை கண்டு ரசிக்கலாம்.