‘தினமலர் பட்டம்’ வினாடி – வினா போட்டி: அசத்திய மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

0
18

கோவை: ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ இதழ் சார்பில், ‘பதில் சொல்; பரிசை வெல்’ என்ற வினாடி-வினா போட்டிகளில், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அசத்தல் பதில்களை அளித்து அரையிறுதிக்கு முன்னேறினர்.

பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பு ‘பட்டம்’ இதழ் வெளியிடப்படுகிறது. இதை வாசிக்கும் மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தும் விதத்திலும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தவும், ‘வினாடி-வினா’ போட்டி நடத்தப்படுகிறது.

கோவை மாநகராட்சி மற்றும் இந்துஸ்தான் கல்வி குழுமத்துடன் இணைந்து இப்போட்டி நடத்தப்படுகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அரையிறுதி போட்டி நடக்கும். இதில், இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

* போத்தனுார் கோணவாய்க்கால்பாளையம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 108 மாணவர்கள் பங்கேற்று எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், ‘எப்’ அணியை சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவி ஹாசினி, ஏழாம் வகுப்பு மாணவி காவ்யா முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தலைமையாசிரியை உமாதேவி பரிசுகளை வழங்கினார்.

* கெம்பட்டி காலனியிலுள்ள, ஒக்கிலியர் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த, பட்டம் வினாடி-வினா போட்டியில், 220 மாணவர்கள் ஆர்வத்துடன் தகுதி சுற்று போட்டியில் எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா நடத்தப்பட்டது.

மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், ‘ஹெச்’ அணியை சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவர்கள் பேச்சி கோகுல கிருஷ்ணன், அஷ்வந்த் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியர் ஜான்பாத்திமா ராஜ் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்வில், ஆசிரியர்கள் தேவி, கனகசுகன்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* சின்னமேட்டுபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 71 பேர் முதல்கட்ட தகுதிசுற்று போட்டியில் பங்கேற்றனர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.

மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், ‘ஹெச்’ அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் யோகேஷ், எட்டாம் வகுப்பு மாணவன் கவின்குமார் ஆகியோர் முதலிடம் பெற்று, அடுத்தகட்ட போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கு தலைமையாசிரியர் கனகராஜ் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.