திதி கொடுக்க ஆழியாற்றில் குவிந்த பொதுமக்கள்

0
84

ஆடி அமாவாசையையொட்டி அம்பராம்பாளையம் ஆழியாற்றில் பொதுமக்கள் குவிந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.

முன்னோர்களுக்கு திதி

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வது மிக சிறந்ததாக கருதப்படுகிறது. முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும் இரைத்து வழிபாடு செய்யப்படும். முன்னோர்களுக்கும், இறந்த பெற்றோர்களுக்கும் ஆடி அமாவாசை தினத்தில் நீர்நிலைகளில் திதி கொடுப்பது வழக்கம்.

அதன்படி பொள்ளாச்சி அருகே உள்ள அம்பாராம்பாளையம் ஆழியாற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர். பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்தும் ஏராளமானோர் ஆழியாற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின்னர் ஆழியாற்றில் புனிதநீராடினர். இதற்கிடையில் திதி கொடுக்க வந்தவர்கள் அம்பராம்பாளையத்தில் இருந்து போடிபாளையம் செல்லும் சாலையில் வாகனங்களை நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும் கழிப்பிட வசதி இல்லாததால் பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

கோவில்களில் சிறப்பு பூஜை

இதுகுறித்து திதி கொடுக்க வந்த பொதுமக்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஆடி அமாவாசை நாளில் திதி கொடுக்க முடியவில்லை. இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் இல்லாததால் ஆழியாற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தோம். இதுபோன்ற நாட்களில் ஆழியாற்றில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோன்று பத்ரகாளியம்மன், மகாளியம்மன், கரியகாளியம்மன் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.