பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஆச்சிபட்டி, குள்ளக்காபாளையம் பிரிவு பகுதியில், வரைபடத்தில் உள்ளபடி பைபாஸ் அமைக்கப்பட்டால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி, சாலை விபத்தும் அதிகரிக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின், ‘பாரத் மாலா பிரயோஜனா’ திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி — திண்டுக்கல் கமலாபுரத்தை இணைக்கும் வகையில், நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக அமைக்கப்படுகிறது. இப்பணிகள், 3,649 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, 80 சதவீதம் புறவழிச்சாலையாக அமையும் இந்த சாலை பணிகளுக்காக, நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. அவ்வகையில், ஆச்சிப்பட்டி அருகே, 2.16 கி.மீ.,க்கு தென்னை மரங்கள், கட்டடங்கள் அகற்றப்பட்டு மேம்பாலம் கட்டப்பட்டு, சர்வீஸ் ரோடு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், புதிதாக அமைக்கப்படும் மேம்பாலம், பொள்ளாச்சி – கோவை ரோட்டில் இருந்து, குள்ளக்காபாளையம் செல்லும் ரோட்டை மறிக்கும் வகையில் கட்டப்பட இருப்பதும் தெரியவந்துள்ளது.
அவ்வாறு, மேம்பாலம் அமைந்தால், போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்துக்கள் அதிகரிக்கும் என்பதால், இத்திட்டம் குறித்து மறு ஆய்வு செய்யவும், மக்களின் கோரிக்கையை பரிசீலிக்கவும், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையினர் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து, தொழில்வர்த்தக சபை தலைவர் வெங்கடேஷ், கோவை கலெக்டருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திண்டுக்கல், சாம்ராஜ்நகர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, கடந்த எட்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில், பொள்ளாச்சி – கோவை நெடுஞ்சாலையில் இருந்து, ஆச்சிபட்டி, குள்ளக்காபாளையம் பிரிவு அருகே அதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
ஆனால், வரைபடத்தில் உள்ளபடி, குள்ளக்காபாளையம் செல்லும் ரோட்டை மறித்து மேம்பாலம் அமைக்கப்பட்டால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி, சாலை விபத்தும் அதிகரிக்கும்.
இங்கு, சந்திப்பு சாலைகள் அமைக்கும் பட்சத்தில், கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வரும் வாகனங்கள், புதிய சர்வீஸ் ரோட்டை பயன்படுத்தி, சற்று இடது புறமாக சென்று வேகத்தடைகளை கடந்து, மீண்டும் பொள்ளாச்சி சாலையில் இணைய வேண்டும்.
அதேபோல், பொள்ளாச்சியில் இருந்து குள்ளக்காபாளையம் செல்லும் சாலையை, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தொழில் நிறுவனத்தினர், பள்ளி மாணவ, மாணவியர் பயன்படுத்தி வருவதால், அவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாவர்.
அடுத்து வரும், 25 ஆண்டுகளை மையமாகக் கொண்டே, புதிதாக சாலைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு, இருக்கையில், மக்களின் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படாத வகையில் சாலை அமைக்க வேண்டும்.
இப்பகுதியில் புதிய மேம்பாலம் அல்லது கூடுதல் அகலம் கொண்ட சர்வீஸ் ரோடு அமைக்க மறு ஆய்வு செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதிகள், பள்ளி நிர்வாகம், தொழில்நிறுவனத்தினர் என, அனைத்து தரப்பு மக்களையும் அழைத்து, திட்டம் குறித்தும் விளக்கம் அளிப்பதுடன் அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரிடம் விளக்கம் கேட்பது?
பொள்ளாச்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை கண்காணிக்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் பணியிடம் காலியாக உள்ளது. அதனால், தேசிய நெடுஞ்சாலை தொடர்பான பிரச்னைக்கு யாரை அணுகுவது, யாரிடம் விளக்கம் கேட்பது, மனு கொடுப்பது என்பது தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.ஆச்சிபட்டியில், பைபாஸ் சாலையை இணைக்கும் இடத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண, திட்ட இயக்குனர் பணியிடத்தை நிரப்பி, கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.