தானமாக பெற்ற நிலத்துக்கு தார்சாலை அமைக்க கோரிக்கை

0
6

கோவை; தனியார் நிலத்தின் வழியாக இணைப்புச்சாலை அமைக்க, தான செட்டில்மென்ட் பெற்ற சீரபாளையம் ஊராட்சி நிர்வாகம், முழுமையாக சாலையை அமைத்துக்கொடுக்காமல் இழுத்தடிப்பது, விவசாயிகளை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

மதுக்கரை தாலுகா, சீரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அரிசிபாளையம் கிராமத்தில் உள்ள, விவசாயிகளுக்கு சொந்தமான, 585, 586, 587, 588 ஆகிய நான்கு சர்வே எண்களை கொண்ட தனி பட்டா நிலத்தில், தார்சாலை அமைக்க, அரிசிபாளையம் கிராம ஊராட்சி நிர்வாகம், தான பத்திரம் பதிவு செய்து தருமாறு கோரினர்.

ஆனால் ஊராட்சிக்கான கூட்டுப்பாதை, மற்றும் கூட்டு அனுபவம் என்றே, வருவாய்த்துறை ஆவணங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இருப்பினும், வருவாய்த்துறை அதிகாரிகளின் வற்புறுத்தலின் காரணமாக, மேற்குறிப்பிட்ட சர்வே எண்களை கொண்ட, நிலத்தின் உரிமையாளர்கள் சீரபாளையம் ஊராட்சிக்கு, தானசெட்டில்மென்ட் செய்து கொடுத்தனர்.

அதன் அடிப்படையில், ஊராட்சி நிர்வாகம் ஒரு பகுதியை மட்டும் சாலையாக செப்பனிட்டு தார்சாலை அமைத்துள்ளது. மீதமுள்ள பகுதிகளை கிடப்பில் போட்டுவிட்டது.

இதனால், தானமாக நிலம் கொடுத்த விவசாயிகள், தங்களது நிலத்தையும் இழந்து இணைப்பு சாலையும் இல்லாமல், போக்குவரத்து பயன்பாட்டிற்கு சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

அதனால், மதுக்கரை வட்டார வளர்ச்சி அலுவலரும், மதுக்கரை தாலுகா தாசில்தாரும் இணைந்து கள ஆய்வு செய்து, இணைப்பு சாலையை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் கந்தசாமி வலியுறுத்தியுள்ளார்.