தலைவர் பதவி தமிழக பா.ஜ.,வில் கடும் போட்டி

0
11

தமிழக பா.ஜ.,வில், அணி மற்றும் பிரிவுகளின் மாநிலத் தலைவர் பதவிகளை பிடிக்க, அக்கட்சியினர் இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ., அமைப்பு ரீதியாக, 66 மாவட்டங்களாக செயல்படுகிறது. இது தவிர, விவசாய அணி, மகளிர் அணி, இளைஞர் அணி, எஸ்.சி., அணி, எஸ்.டி., அணி, ஓ.பி.சி., அணி, சிறுபான்மையினர் அணி என, ஏழு அணிகள்; மீனவர், ஆன்மீகம், மருத்துவம் உள்ளிட்ட, 28 பிரிவுகள் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு இறுதியில், மாநிலம் முழுதும் கிளை, மண்டலம் அளவில், தேர்தல் நடத்தி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு துவக்கத்தில், மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த மாதம் மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன், போட்டியின்றி தேர்வானார். அதைத் தொடர்ந்து, மாநில அணிகள் மற்றும் பிரிவுகளுக்கு, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பதவிகளுக்கு தங்களை நியமிக்குமாறு, தமிழக பா.ஜ.,வில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களின் ஆதரவாளர்கள், மேலிட தலைவர்களை சந்தித்து, வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழக பா.ஜ., மூத்த தலைவர்களும், தங்களுக்கு வேண்டியவர்களை நியமிக்கும்படி கூறியுள்ளனர். ‘தேசிய தலைவர் பதவிக்கு தேர்தல் முடிவடைந்ததும், தமிழகத்தில் அணிகள் மற்றும் பிரிவுகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுவர்; பாகிஸ்தான் மீது நம் நாட்டு ராணுவம் போருக்கு தயாராகி வருவதால், தற்போதைக்கு தேசிய தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை. சிபாரிசுக்கு வருவதை விட்டு, கட்சி பணிகளில் கவனம் செலுத்துங்கள்’ என, பதவி கேட்போருக்கு, மேலிடத் தலைவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.