கருத்துகேட்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் வெள்ளக்கோவில் பகுதிக்கு கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வெள்ளக்கோவில் பகுதிக்கு கூடுதலாக தண்ணீர் வழங்குவது குறித்து பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள பி.ஏ.பி. அலுவலகத்தில் பாசன சபை தலைவர்களுடன் கருத்துகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் தேவராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் யஸ்வந்த் கண்ணன், குமரேஷ், செயற்பொறியாளர்கள் நரேந்திரன், கோபி, போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்தீபன் மற்றும் 134 பாசன சபை தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பாசன சபை தலைவர்கள் பேசும்போது கூறியதாவது:-
தண்ணீர் திருட்டு
வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் கடைமடை விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். கால்வாயில் தண்ணீர் திருடுவதால் அதிகமாக நீர் இழப்பு ஏற்படுகிறது. தண்ணீர் திருட்டை தடுக்க உயர்மட்ட குழு நடவடிக்கை எடுப்பதில்லை. வணிக நோக்கில் தண்ணீர் எடுப்பவர்களின் இணைப்பை துண்டிக்காமல் நோட்டீசு அனுப்புகின்றனர். எனவே தண்ணீர் திருட்டை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.
5 நாட்கள் கொடுக்கப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை. எனவே 7 நாட்களுக்கு வழங்க வேண்டும். கிளை கால்வாய்களில் தண்ணீர் செல்வதை கணக்கீடு செய்து, கடைமடை வரை தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாய்களை தூர்வாராமல் தண்ணீர் திறப்பதால் நீர் இழப்பு ஏற்படுகிறது. எனவே கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தண்ணீர் இல்லாத நிலையில் பாசன பரப்பை விரிவாக்கம் செய்ய கூடாது.
சமச்சீர் நீர்பங்கீடு
அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே சீரான தண்ணீர் வழங்க வேண்டும். கடைமடை வரை தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் அணையின் கொள்ளளவை அதிகரித்து நீர் இருப்பை அதிகரிக்க வேண்டும்.
ஒரு சில கால்வாய்களில் தண்ணீர் அதிகமாக விடப்படுகிறது. எனவே சமச்சீர் நீர்பங்கீடு குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அனைவருக்கும் நீர்பங்கீடு சரியாக இல்லையென்றால் போராட்டம் நடத்த வேண்டிய இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பழைய நடைமுறை
பாசன சபை தலைவர்களுடன் கருத்து கேட்கப்பட்ட பின் பி.ஏ.பி. திட்ட கண்காணிப்பு பொறியாளர் தேவராஜன் கூறியதாவது:-
பாசன சபை தலைவர்கள் ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்கப்பட்டு உள்ளது. கால்வாயை சீரமைக்காமல் 100 சதவீதம் நீர் இழப்பை கணக்கீடு செய்ய முடியாது. தற்போது நீர் இழப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான பாசன சபை தலைவர்கள், விவசாயிகளின் ஒருமித்த கருத்துப்படி பழைய நடைமுறையே பின்பற்றப்படும். நீர்இழப்பை முழுமையாக ஆய்வு செய்த பின் கூடுதலாக தண்ணீர் கிடைக்கும்பட்சத்தில் இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடும் வாக்குவாதம்
வெள்ளக்கோவில் பகுதிக்கு கூடுதலாக தண்ணீர் வழங்குவது குறித்த கருத்துகேட்பு கூட்டத்தில் பொங்கலூரை சேர்ந்த கோபால் என்பவர் பேசும்போது, யார் போராட்டம் நடத்தினாலும் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க கூடாது. அதிகாரிகளின் முடிவு ஒட்டுமொத்த விவசாயிகளையும் பாதிக்க கூடாது என்றார்.
இந்த கருத்துக்கு மற்றொரு தரப்பு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒருவருக்கொருவர் மாறி, மாறி பேசியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. யார் என்ன பேசுகிறார்கள் என்பதே தெரியாத அளவிற்கு கூச்சல், குழப்பம் ஆனது. பின்னர் அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர்களை சமாதானப்படுத்தினார்.
பரபரப்பு
பின்னர் திருமூர்த்தி முன்னாள் திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் பேசும்போது, அனைவருக்கும் விருப்பம் இருந்தால் தண்ணீரை பிரித்து கொடுக்கலாம். எனவே அதிகமாக பாசன சபை தலைவர்கள் கூறும் கருத்தை கேட்டு முடிவு எடுக்க வேண்டும் என்றார். இதற்கு மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஏற்பட்டனர். இதற்கிடையில் இருதரப்பு விவசாயிகளும் ஒருவருக்கொருவர் எழுந்து நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.