கோவை: கோவையில் நடந்த இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த தலைமை ஆசிரியரின் உடல் உறுப்புகள் 5 நபர்களுக்கு தானம் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா நல்லூர் சக்தி கார்டன் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி அரசு பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் கடந்த 24ம் தேதி அன்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் படுகாயம் அடைந்தார்.
அக்கம், பக்கத்தினர் செந்தில் குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் நேற்று உயிரிழந்தார். இதனால் செந்தில்குமாரின் உடல் உறுப்புகள் தானம் செய்ய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இதில் கல்லீரல் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம், கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டது.