தரமற்ற உரங்களை வாங்காதீர்… விவசாயிகளுக்கு எச்சரிக்கை! ஆன்லைனிலும் உத்தரவாதம் இல்லை

0
4

மேட்டுப்பாளையம்: ஆன்லைன் வாயிலாக பணம் மோசடி சைபர் கிரைம்கள் அதிகரித்து வரும் நிலையில், விவசாயிகளை குறி வைத்து, ஆன்லைன் வாயிலாக தரமற்ற உரங்களும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையடுத்து, ”விவசாயிகள், ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்படும் உரங்களை நம்பி வாங்க வேண்டாம்” என வேளாண்மைத்துறை கோவை மாவட்ட இணை இயக்குனர் கிருஷ்ணவேணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:-

உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985 ன் படி, ரசயான உரங்கள் மற்றும் இயற்கை உரங்கள் ஆன்லைன் வாயிலாக வாங்க வழிவகை இல்லை. விவசாயிகள் ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்படும் உரங்கள், தரமானதா என்பதை உறுதிபடுத்த இயலாது.

மேலும் இதன் விலையும் அதிகமாக இருக்கும். எனவே ஆன்லைன் வாயிலாக விவசாயிகள் உரம் வாங்க வேண்டாம்.

அதே போல், பதிவு செய்யப்படாத சில போலி நிறிவனங்கள் தங்களது முகவர்களை நேரடியாகவே தோட்டங்களுக்கு அனுப்பி உரங்களை விற்பனை மேற்கொள்ள முயல்கின்றனர். அவர்களிடமும் உஷாராக இருக்க வேண்டும்.

இம்மாதிரியான உரங்களை வாங்கி பயன்படுத்துவதால், சாகுபடி செலவு அதிகமாவதுடன், மகசூல் இழப்பீடு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே.

விவசாயிகள் உரிமம் பெற்ற உர விற்பனை நிலையங்கள் வாயிலாகவே ரசாயன உரங்கள், இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் வாங்கி பயன்படுத்த வேண்டும்.

வேளாண்மைத்துறையின் உர ஆய்வாளர்கள் மற்றும் பூச்சி மருந்து ஆய்வாளர்கள் பல்வேறு சோதனைகள் வாயிலாக உரிமம் பெற்று விற்பனை செய்யப்படும் உர தரத்தினை உறுதிப்படுத்துகின்றனர். மேலும், அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்வதையும் உறுதிபடுத்தி வருகின்றனர். எனவே, நகர்ப்புற மாடித்தோட்ட காய்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் உரம் சம்பந்தப்பட்ட ஆன்லைனில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில், குறைவான விலையில் தரமான உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேளாண்மைத்துறை வாயிலாக வழங்கப்படும் பயிற்சி மற்றும் கூட்டங்களில், ஆன்லைன் வாயிலாக ரசாயன உரங்கள் மற்றும் இயற்கை உங்களை பரிவர்த்தனை செய்வதற்கான வழிவகை இல்லை என்பதை குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து

வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் கூறுகையில்,

”கோவை மாவட்டத்தில் விவசாயிகளை குறி வைத்து, சில தனி நபர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உரங்களை எடுத்து வந்து, இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட உரம், நல்ல உரம், குறைந்த விலை என விற்பனை செய்கின்றனர்.

அதன் பின் அந்த உரத்தை பயன்படுத்தும் போது, எந்தவித மாற்றமும் கிடைக்காமலும், உரத்தினால் பயிர் சேதம் ஏற்படும் போதும், வந்து சென்ற நபர்களுக்கு போன் செய்தால், அந்த தொலைபேசி எண் ‘அவுட் ஆஃப் ஆர்டர்’ என்று வருகிறது. எனவே இதுபோன்று தனிநபர்களை நம்பி கள்ள உரத்தை, தரமற்ற உரத்தை விவசாயிகள் வாங்க வேண்டாம்,” என்றார்.