தம்பதியர் உருவாக்கிய ‘தாவர உலகம்’

0
6

பாலக்காடு: பாலக்காடு அருகே, ஓய்வு வாழ்க்கையை மேலும் ஆக்கப்பூர்வமாக மாற்றி, தம்பதியர் பூந்தோட்டம் அமைத்து பராமரிக்கின்றனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், யாக்கரை கைரளி கிராமத்தை சேர்ந்தவர் சுகுமாரன், 64, இன்ஸ்ட்ருமென்டேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி, உஷா, 60, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இருந்து 2020 விருப்ப ஓய்வு பெற்றவர்.

இவர்களது மகன் சுபாஷ், மகள் காயத்ரி இருவரும் வேலை நிமித்தமாக, குடும்பத்துடன் வெளிநாட்டில் உள்ளனர். இந்நிலையில், ஓய்வு வாழ்க்கையை, ஆக்கபூர்வமாக மாற்றலாம் என யோசித்த இத்தம்பதியர், கடந்த, 2021ல் 23 சென்ட் நிலத்தில் பூச்செடிகளை பராமரிக்க துவங்கினர்.

தற்போது, பூச்செடிகள், காய்கறி சாகுபடி, புற்கள், பழ செடிகள் மற்றும் நீர்வாழ் தாவரங்கள் என, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளை பராமரித்து வருகின்றனர்.

மாலை நேரத்தில், அருகிலுள்ள வீடுகளிலிருந்து வரும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களால், பூந்தோட்டம் நிரம்பி விடுகிறது.

இதுகுறித்து சுகுமாரன், மனைவி உஷா ஆகியோர் கூறியதாவது:

ஓய்வு காலத்தை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக மாற்றலாம் என, யோசித்தோம். வீட்டில் பூச்செடிகளை வளர்க்க திட்டமிட்டோம். தோட்டத்துக்கான தாவரங்களை சிறிது சிறிதாக சேகரித்து வளர்க்க துவங்கினோம்.

தோட்டத்தில், 30 தாமரை வகைகளும், 25 வகையான ஆம்பல்களும் உள்ளன. ‘மெக்சிகன் சோடு’, ‘ஜப்போணிக்கா’, ‘வாட்டர் போப்பி’, ‘வாட்டர் மொசயிக்கு’ போன்ற நீர்வாழ் தாவரங்களும் உள்ளன.

தோட்டத்தில், 15 வகையான ரோஜாக்களும், 25 வகையான கற்றாழைகளும் உள்ளன. பூச்செடிகள் மட்டும், 500க்கும் மேல் உள்ளன. காய்கறி செடிகளும் உற்பத்தி செய்கிறோம். பூந்தோட்டம் அமைத்ததை ஆரம்பத்தில் கேலி செய்தவர்கள் கூட, இந்த தாவர உலகத்தை நேசிக்க துவங்கியுள்ளனர். இந்த தோட்டம், வீடு தாவரங்களுக்கு மட்டுமல்ல, பழ செடிகள் இருப்பதால், பறவைகளுக்கும் அடைக்கலமாக உள்ளன.

இவ்வாறு, கூறினர்.