தமிழ் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினம்

0
62

கோவையில் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழ் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த கோவை கோவை மாவட்டத்தில் 360 பள்ளிகளை சேர்ந்த 16,661 மாணவர்கள், 19,166 மாணவிகள் என மொத்தம் 35,827 பேர் எழுத உள்ளனர். நேற்று தமிழ் தேர்வு நடைபெற்றது. இதற்காக காலை 8 மணி முதல் தேர்வு மையத்துக்கு மாணவர்கள் வரத்தொடங்கினர். அவர்கள் 9.45 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 128 மையங்களில் 15,773 மாணவர்கள், 18,426 மாணவிகள் என மொத்தம் 34,199 பேர் எழுதினர். 888 மாணவர்கள், 740 மாணவிகள் என மொத்தம் 1,628 பேர் தேர்வு எழுத வரவில்ைல. தேர்வு முடிந்ததும் போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள் மதிப்பீடு கட்டுக்காப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

கலெக்டா், ஆணையாளர் ஆய்வு

இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் யாரும் காப்பி அடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடவில்லை என்று முதன்மை கல்வி அதிகாரி பூபதி தெரிவித்தார்.

முன்னதாக ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் கலெக்டர் கிராந்திகுமார், ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி தேர்வு மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி உடன் இருந்தார்.

ஒரு மதிப்பெண் கேள்வி கடினம்

மொழிப்பாடங்களுக்கான தமிழ் தாள் தேர்வு எளிதாக இருந்ததாக வும், ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

துணிவணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.என்.நித்யா:- எனக்கு தேர்வு அறைக்குள் செல்லும் முன்பு சற்று பதற்றமாக இருந்தது. அறைக்குள் சென்றதும் பயம் பறந்தது. வினாத்தாள் கொடுத்ததும் முழுமையாக படித்து பார்த்துவிட்டு தேர்வு எழுத தொடங்கினேன். மனப்பாடம் பகுதி கேள்வி எண் 47-ல் கேட்டப்பட்ட வினாக்கள் பாடப்புத்தகத்தில் இடம்பெறாத கேள்வியாக இருந்தது. 80-க்கும் அதிகமாக மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

மாணவி ஷீலா:- தமிழ் பாடத்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. அதில் பகுதி 1-ல் இடம் பெற்று இருந்த ஒரு மதிப்பெண் கேள்விகளை தவிர பிற கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்தன. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிப்பெயர்ப்பு கேள்வி மிகவும் சுலபமாக இருந்தது.

மாணவர் முகமது சாஹித்:- இந்த முறை ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. பிற வினாக்கள் அனைத்தும் மிகவும் எளிமையாக இருந்தன. கூடுதல் நேரம் இருந்தால் இன்னும் நன்றாக எழுதி இருக்கலாம்.

நல்ல மதிப்பெண் கிடைக்கும்

மாணவி பிரியதர்ஷினி:- ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டும் படிக்காத கேள்விகளாக இருந்தன. எனவே அவை சற்று கடினமாக இருந்தன. ஆனால் அந்த வினாக்களையும் ஓரளவுக்கு எழுதி உள்ளேன். இதில் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்று நினைக்கிறனே்.

மாணவி நந்தினி:- பிளஸ்-2 பொதுத்தேர்வுக்காக கடந்த ஒரு ஆண்டாக டி.வி., செல்போனை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். இரவு கண்விழித்து படிக்காமல் இரவு 9 மணிக்கு எல்லாம் தூங்கி விட்டு காலை 5 மணிக்கு எழுந்து படித்து வந்தேன். தமிழ் பாடத் தேர்வை நன்றாக எழுதி உள்ளேன். அதில் எனக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

மாணவர் ஹபீப்புர் ரஹ்மத்துல்லா:-பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு குறித்து எவ்வித கவலையும், பயமும் வேண்டாம் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறி இருந்தார். அது பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு உந்து சக்தியாக அமைந்தது. மேலும் பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள ஏதுவாக இருந்தது. தமிழ் பாடத்தேர்வை எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக எழுதி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.