குளங்கள் புனரமைப்பு
கோவை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வசிந்தாமணி குளம், முத்தண்ணன் குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்கள் மேம்ப டுத்தப்பட்டு வருகிறது. இதில் உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளம் புனரமைப்பு பணிகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட் டிற்கு திறந்து விடப்பட்டு உள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதன்காரணமாக இங்கு படகு சவாரியும் தொடங்கப்பட்டு உள்ளன.
ரூ.40 கோடியில் மேம்பாடு
இந்த நிலையில் ரூ.40 கோடியில் மேம்படுத்தப்பட்டு வரும் உக்கடம் பெரியகுளத்தில் பொதுமக்களை கவரும் வகையில் தமிழர் பண்பாட்டை விளக்கும் வகையில் பல்வேறு சிலைகள் சைக்கப்பட உள்ளன. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில் உள்ள குளங்கள் ரூ.960 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த குளங்களில் பூங்கா, நடைபாதை, அலங்கார விளக்குகள், சிறுவர் விளையாட்டு பூங்கா என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனவே அவை பொழுது போக்கு மையங்களாக காட்சி அளிக்கிறது.
திருவள்ளுவர் சிலை
வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரி நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 350 ஏக்கர் பரப்பளவு உள்ள குறிச்சி குளத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளுவர் சிலை, ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட தமிழர் பண்பாட்டை விளக்கும் வகையில் சிலைகள் வைக்கப்பட உள்ளன. இதில் திருவள்ளுவர் சிலையை கோவை -பொள்ளாச்சி ரோடு குறிச்சி பிரிவில் உள்ள சிறிய குளத்தில் வைக்க முடிவு செய் யப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.