தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லுாரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:
நீட் தேர்வில் விருப்பு, வெறுப்புகளை காட்டும் அளவுக்கு மதிப்பெண் வழங்குகின்றனர். நீட் தேர்வில் உண்மைத்தன்மை இல்லை. நீட் தேர்வில், மது குறித்து கேள்வி கேட்டுள்ளனர். நம் கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி, அழிக்கும் திட்டம் தான் நீட் தேர்வு. இதனாலேயே, நீட் தேர்வை தமிழகம் எதிர்க்கிறது.
ஒரு இனம் அழிவதற்கு வேறு எதுவும் செய்ய வேண்டாம். மொழியை அழித்ததால் போதும். எனவே தான், மொழி கொள்கையில் தமிழகம் உறுதியாக இருக்கிறது. அதனாலேயே, இன்றைக்கு 89 சதவீதம் பேர் தமிழ் மொழியை பேசிக் கொண்டு இருக்கின்றனர். ஆகவே தான், மொழியை விட்டுக் கொடுக்காமல், மத்திய அரசு கொடுக்கும் நிதிக்காக ஏங்காமல் வீராப்பாக நிற்கிறார் முதல்வர்.
பெற்றோர்கள் செய்யும் தொழிலையே அவர்களுடைய பிள்ளைகளும் செய்ய வேண்டும் என சொல்வதே மனுதர்மம் என்கின்றனர். அதை எப்படி தர்மம் என ஏற்க முடியும்; சொல்லப் போனால், அது அதர்மம். இது, ஆர்.எஸ்.எஸ்.,சின் சித்தாந்தங்களில் ஒன்று.
ராமனுஜர் பற்றி யாரும் அறியாத நிலையில், புத்தகங்களை எழுதி, தொலைக்காட்சி தொடராக அதை வெளியிட்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அந்த நுாலை வெளியிட்டவர் நம் முதல்வர் ஸ்டாலின். இவர்களைத்தான், நாத்திகவாதிகள் எனச் சொல்லி, ஆன்மிகவாதிகளிடம் இருந்து பிரிக்கப் பார்க்கின்றனர். இவர்கள் எல்லா மதங்களுக்கும் சமமானவர்கள். ஆனால், ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என பொய் பிரசாரம் செய்து, தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கின்றனர்; அது நடக்காது.
தனிப்பட்ட இருவருக்கு இடையே நடக்கும் பிரச்னையால் சட்டம்-ஒழுங்கு கெட்டால் கூட, அதை அரசியல் ரீதியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு என விமர்சிக்கின்றனர். உண்மையிலேயே சட்டம்-ஒழுங்குக்கு சவால் விடும் பிரச்னைகள் என்றால், அதன் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பலர் கைது செய்யப்படுகின்றனர். இது எதிர்கட்சியினருக்கும் தெரியும். ஆனால், வம்படியாக விமர்சிக்கின்றனர்.
சட்டசபையில் விருப்பு-வெறுப்பின்றி, அனைவரும் பேச நேரம் அளிக்கப்பட்டது. சொல்லப்போனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு குறைந்த அளவிலேயே பேச வாய்ப்பளிக்கப்பட்டது. எதிர்க்கட்சியினர் பேசும்போது, நேரலை துண்டிக்கப்பட்டதாக உண்மைக்குப் புறம்பாக பேசுகின்றனர். கேள்வி நேரம், அமைச்சர்களின் பதில் உரை, முதல்வர் உரை மட்டும் நேரலை செய்யப்படுகிறது. எல்லா நேரமும் நேரலை செய்ய வாய்ப்பில்லை.
கடந்த 1952க்கு பின், சட்டசபை நிகழ்வுகள் ஆன்லைனில் கொண்டு வரப்பட்டுள்ளன. 1921ல் இருந்து 1952ம் ஆண்டு வரையிலான சட்டசபை நிகழ்வுகள் எழுத்து வடிவங்களில் வெளியிடப்படும். இதில், எந்த இடத்திலும் துளியளவு கூட மறைக்கப்படாது.
இவ்வாறு அவர் பேசினார்.