‘தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட போதைப் பழக்கம் காரணம்

0
14

தொண்டாமுத்துார் : இந்து மக்கள் கட்சி சார்பில், பேரூர் செட்டிபாளையம், சிறுவாணி மெயின் ரோட்டில் உள்ள தனியார் மதுபான பாரை அகற்ற வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் டாஸ்மாக் மதுக்கடையை அழிக்க வேண்டும், நெடுஞ்சாலையில் விதிமுறை மீறி வைத்துள்ள தனியார் மதுபான கடையை அகற்ற வேண்டும் என கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் அர்ஜுன் சம்பத் பேசுகையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், கனிமொழி மற்றும் குடும்பத்தினர் மதுக்கடையை ஒழிக்க போராடினர். ஆனால், தற்போது முதல்வராக பதவியேற்றபின் ஸ்டாலின் டாஸ்மாக்கை மூடவில்லை.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை கலாசாரம். சாராயம் மட்டுமின்றி மெத்தபெட்டமைன் போதைப்பொருட்களும் புழக்கத்தில் உள்ளன. தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதற்கு போதைப்பழக்கம் தான் முக்கிய காரணம்.

தமிழக அரசு, பிற மதத்தினரின் பண்டிகையின் போது, மதுக்கடையை மூடி விடுகின்றனர். ஹிந்துக்களின் பண்டிகை வந்தால், டார்கெட் வைத்து, வியாபாரம் செய்கின்றனர்,” என்றார்.

இ.ம.க., அமைப்பு குழு மாநில செயலாளர் சதீஷ்குமார், மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் விக்னேஷ், மேற்கு மாவட்ட செயலாளர் பாலகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.