தமிழகத்தில் கொட்டப்படும் கேரள இறைச்சிக் கழிவு ; போக்கு காட்டும் ‘போக்கு லாரிகள்’

0
75

பொள்ளாச்சி; கேரளாவில் இருந்து சோதனைச்சாவடி அல்லாத வழித்தடங்களில் மினி லாரிகளில் எடுத்து வரப்படும் இறைச்சிக் கழிவுகள், தமிழகத்தில் கொட்டப்படுவதாக புகார் எழுகிறது.

தமிழக – கேரளா மாநில எல்லையையொட்டி, கோவை மாவட்டம், பொள்ளாச்சி உள்ளது. இங்கிருந்து கேரள மாநிலம் செல்வதற்கு பிரதானமாக, ஆறு வழித்தடங்கள் உள்ளன. இதில், செமணாம்பதி நீங்கலாக, கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புணி, வீரப்பக்கவுண்டனுார் ஆகிய, இரு மாநில எல்லையொட்டி பகுதிகளில் போலீஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இருந்தும், கேரளாவில் இருந்து மினி லாரிகளில் கொண்டுவரப்படும் இறைச்சிக் கழிவுகள், தமிழக எல்லையோரம் உள்ள சிறு குன்றுகள், ஆற்றோரம் மற்றும் நெடுஞ்சாலையோரம் மூட்டைகளாக கொட்டப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்த முறையான விதிகளோ, தண்டனையோ வகுக்கப்படாததால், சிலர், இத்தகைய செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை அறிந்தே, விதிகளை மீறி வாகனத்தில் இறைச்சிக் கழிவுகள், கேரளாவில் இருந்து கொண்டுவரப்படுவதை தடுக்க, சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.தன்னார்வலர்கள் கூறியதாவது:

கேரள மாநிலம், பாலக்காடு அருகே தனியார் நிறுவனம் ஒன்று, மொத்தமாக இறைச்சிகளை கொள்முதல் செய்து, அதனை பதப்படுத்தி, ஓட்டல்களுக்கு ‘சப்ளை’ செய்கிறது. அவ்வகையில், தினமும், இறைச்சிக்காக, 2,000 கோழிகள் வெட்டப்படுகின்றன. அங்கு, சேரும் கழிவுகள், எல்லையையொட்டி தமிழகத்தின் பகுதிகளில் கொட்டப்படுகிறது.

காரணம், கேரளாவில், இறைச்சிக் கழிவுகள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை பொதுமக்களே மடக்கிப் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்து விடுகின்றனர். மீறி எங்காவது கழிவு கொட்டுவதை மக்கள் பார்த்தால், முதலில் வாகனத்தில் உள்ளவர்களை ‘நையப் புடைத்து’, அதன் பின்னரே போலீசாரிடம் ஒப்படைக்கின்றன

இதுதவிர, போலீசார் வழக்குப் பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தால், 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். வாகனத்தை மீட்க முடியாத அளவிற்கு, சட்ட நடவடிக்கை பாய்கிறது. இதே நடைமுறையை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும். அப்போது தான், கேரளாவில் இருந்து இறைச்சி உள்ளிட்ட கழிவுகள் கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டுவது தடுக்கப்படும்.

இவ்வாறு கூறினர்.

கடும் நடவடிக்கை தேவை

– சேனாதிபதி,

பொள்ளாச்சி

லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலர்

பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் லாரிகளில், கழிவுகள் கொண்டுவரப்படுவதில்லை. மாறாக, பிற மாவட்டங்களில் இருந்து காய்கறி, வாழை மற்றும் இதர பொருட்களை கேரளாவுக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள், மீண்டும் தமிழகம் நோக்கி வருகையில், இறைச்சிக் கழிவுகள் எடுத்து வரப்படுகின்றன.

குறிப்பாக, பொள்ளாச்சியை கடந்து செல்லும் போக்கு லாரிகள், இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அப்போது, அந்த வாகன ஓட்டுனர்கள், சோதனைச்சாவடி அல்லாத வழித்தடங்கள் வாயிலாக, கேரள எல்லையை கடந்து, தமிழக எல்லைக்குள் நுழைந்ததும், ஏதேனும் ஒரு பகுதியில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டிச் செல்கின்றனர்.கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வரும் சரக்கு வாகனங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு, இறைச்சிக் கழிவுகள் கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.