தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டுமா? விரிவாக பதிலளித்த கோவை மக்கள்

0
4

2 026ல் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த ஐந்து ஆண்டுகளும், தங்கள் கூட்டணி ஆட்சியே தொடரும் என்கின்றனர் ஆளுங்கட்சியினர். ஆனால் கோவை மக்களின் பார்வையும், பதிலும் வேறாக உள்ளது

‘பெரியளவில் ‘டாஸ்மாக்’ ஊழல்’

இந்த ஆட்சியில் பல பிரச்னைகள் உள்ளன. இந்த அரசால் ஒவ்வொரு பிரச்னையையும் சமாளிக்க முடியவில்லை. டாஸ்மாக் ஊழல் பெரியளவில் நடந்துள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. விவசாயிகள் வாழ முடியவில்லை. சம்பாதிக்கும் பணத்தை, வீட்டுக்கு கொண்டு சேர்ப்பதற்குள் போதும், போதும் என்றாகி விடுகிறது. எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.ஆகவே, ஆட்சி மாற்றம் கட்டாயம் வேண்டும்.

– என்.கோபால்சாமி பொள்ளாச்சி

‘வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’

இவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பெரிதாக எந்த ஒரு விஷயத்தையும் செய்யவில்லை. ஆட்சிக்கு வரும் முன், பல வாக்குறுதிகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. ஊழல் தான் அதிகளவில் இருந்து வருகிறது. அதேபோல், எந்த ஒரு வளர்ச்சியும் மாநிலத்தில் இல்லை. அதற்கேற்ற திட்டங்களும் இல்லை. அப்புறம் ஏன் இந்த ஆட்சி?

– எ.மணி சுல்தான்பேட்டை, சூலுார்

‘தொழில்முனைவோர் பாதிப்பு’

எந்த ஒரு சலுகைகளும் இல்லை. குறிப்பாக தொழில்முனைவோருக்கு எவ்வித உதவியும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, பல தொழில்முனைவோர் தொழிலை கைவிட்டு வேறு பணிகளுக்கு சென்றுள்ளனர். ஒவ்வொரு விஷயத்திலும் பின்னடைவு தான் ஏற்பட்டுள்ளது.அதனால் வெறுத்துப்போய் விட்டது.

– கே.நடராஜன் சுயதொழில் கருமத்தம்பட்டி,

‘இளைஞர்களுக்கு வேலை இல்லை’

விலைவாசி உயர்வால், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத்தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. அதை உருவாக்க தேவையான நடவடிக்கை எடுக்காமல், டாஸ்மாக்கைவளப்படுத்துவதிலேயே இந்த அரசு குறியாக உள்ளது

– ஆர்.காளியப்பன் விவசாயி, கிட்டாம்பாளையம்

‘தொழில் முடங்கியுள்ளது’

சுயதொழில் செய்வதில் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. எந்த ஒரு ஆதரவும் இல்லை. தொழில் முடங்கியுள்ளது. வேலைவாய்ப்பு முற்றிலும் இல்லை. அப்படியே கிடைத்தாலும் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. இதை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் இல்லை.

– எம்.லட்சுமிபதி சுயதொழில், ஆண்டக்காபாளையம்

‘நடுத்தெருவில் விவசாயிகள்’

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை முன்னேற்ற, எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. விவசாயிகளை நடுத்தெருவில் இந்த அரசு நிறுத்தியுள்ளது. பெயரளவுக்கு மட்டுமே திட்டங்கள் உள்ளன. அவற்றால் எந்த ஒரு பயனும் இல்லை. அவர்கள் செயல்படுத்தும் திட்டம் எல்லாம், நாட்டை சுரண்டும் திட்டங்களாகவே உள்ளன. விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்தில் உள்ளோம். எங்கள் பொருட்களுக்கான சந்தையும் இல்லை.

-நீரா.பெரியசாமி விவசாயி, உடுமலைபேட்டை

‘அரசு அலுவலகங்களில் லஞ்சம்’

ஊழல் தான் முற்றிலும் நிறைந்துள்ளது. முதியவர்கள் ஏதாவது ஒரு விஷயத்துக்காக அரசு அலுவலகங்களுக்கு சென்றால், பணம் இன்றி நடப்பது கிடையாது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. சட்டங்கள் மட்டுமே உள்ளன. நடைமுறையில் செயல்படுத்தப்படுவதில்லை. ஒரு குற்றம் நடந்து முடிந்த பின்னரே சட்டங்கள் இயற்றப்படுகின்றன. முன்னெச்சரிக்கையாக தடுக்க, சட்டங்கள் எதுவும் இல்லை. எங்கும் நீதியில்லை. குறிப்பாக குழந்தைகள் மீதான வன்முறை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. என்று எங்கள் குழந்தைகள் ரோட்டில் சுதந்திரமாக விளையாடுகின்றனரோ

அன்று தான் பாதுகாப்பான ஊர் என கூறுவோம்.

– சி.சோபியா வக்கீல், சுந்தராபுரம்

‘பாலியல் தொல்லை அதிகம்’

பாலியல் வன்கொடுமையால், பெண்கள் அடையும் துன்பத்துக்கு அளவில்லை. அதை தடுக்கவும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சட்டம் இயற்றுபவர்கள் அதை மதிப்பதில்லை. அனைத்துக்கும் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. பெண்களுக்கான நீதி போராடினால் மட்டுமே கிடைக்கிறது. டாஸ்மாக் மது ஒழிப்பு என்பது, வெறும் பேச்சில் மட்டுமே உள்ளது. அதன் வாயிலாக பலரும் ஆதாயமே அடைகின்றனர்.

-ஈ.ரேவதி சுயதொழில், பாரதிபுரம், சூலுார்.