தபால் ஊழியர்களையும் கவுரவிக்க வேண்டும் தேவசம் போர்டு தலைவருக்கு வேண்டுகோள்

0
7

கோவை : சபரிமலையில், மண்டல காலம் மற்றும் மகர விளக்கு காலங்களில் பணிபுரியும் துறை சார்ந்த ஊழியர்களை, திருவாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் கவுரவப்படுத்தும் நிலையில், தபால் ஊழியர்களையும் கவுரவப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சபரிமலையில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் பணிபுரியும் போலீசார், வனத்துறை, மின்வாரியத்தினர், குடிநீர் வாரியத்தினர், வருவாய்த் துறையினர், துப்புரவு பணியாளர்கள் உட்பட துறை சார்ந்த ஊழியர்களை, கடந்த பல்லாண்டுகளாக, திருவாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் கவுரவித்து வருகின்றனர்.

ஆனால், பக்தர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சேவை வழங்கும் தபால் துறையினரை கவுரவிப்பதில்லை. எனவே, இவர்களையும் கவரவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, தேசிய விருது பெற்ற, கோவையை சேர்ந்த தபால் துறையின் முன்னாள் அலுவலர் ஹரிஹரன், திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்துக்கு அனுப்பியுள்ள கடிதம்:

சபரிமலையில், பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு, தொடர்ந்து சிறப்பான ஏற்பாடுகள் செய்து வருகிறீர்கள். இதில் போலீசார், வனத்துறை, மின்வாரியத்தினர், குடிநீர் வாரியத்தினர், வருவாய் துறையினர் உட்பட பலரின் பணியை பாராட்டும் வகையில், தேவசம்போர்டு வாயிலாக, அவர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.

ஆனால், சபரிமலையில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் தபால் நிலையத்தில், பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

இங்கிருந்து, ஐயப்பன் வீற்றிருக்கும் பதினெட்டாம் படியுடன் கூடிய, சிறப்பு முத்திரை அடங்கிய கடிதம், போஸ்ட் கார்டுகளை, பக்தர்கள் வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து, சன்னிதானத்துக்கு கடிதங்களும் அனுப்பப்படுகின்றன. தவிர, மற்ற காலங்களில், பம்பா கிளை தபால் நிலையத்தில் இருந்து, சபரி மலையில் இருப்பவர்களுக்கு கடிதங்கள் கொண்டு சேர்க்கப்படுகின்றன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பணியை, மேற்கொண்டு வரும் தபால் நிலைய அதிகாரிகளையும், ஊழியர்களையும் கவுரவிப்பதில்லை. எனவே, இவர்களையும் கவுரவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.