அன்னுார்: அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்குவதை கைவிடக் கோரி அன்னுாரில் பிரசாரம் நடந்தது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அண்ணா தொழிற்சங்கம் சார்பில், நேற்று முன்தினம் அன்னுார் பணிமனை முன்பு துண்டு பிரசுரங்களை விநியோகித்து பிரச்சாரம் நடந்தது.
15 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே பேசி முடிக்க வேண்டும். 2003 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்து துறையை, தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். போக்குவரத்து துறையில் உள்ள காலியிடங்களை வேலை வாய்ப்பு மையம் மூலம் நிரப்ப வேண்டும். பணியில் இருந்து ஓய்வு பெற்றோருக்கு நிலுவையில் உள்ள விலைவாசிப்படி, ஒப்பந்த பலன் மற்றும் பணப்பயனை உடனே வழங்க வேண்டும்.
பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கு ஓய்வு பெறும் நாளன்றே பயன்களை வழங்க வேண்டும். எதிர்க்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகளை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், என பிரசாரம் செய்தனர்.
இதை வலியுறுத்தி, கோவை மண்டல அளவில், கோவை சுங்கம் கிளை முன்பு இன்று மதியம் 2:00 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.
பிரசாரத்தில், தொழிற்சங்கத்தின் மண்டல தலைவர் ரமேஷ், மண்டல துணை செயலாளர் சிவக்குமார், கிளைத்தலைவர் ஸ்டான்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.