பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை, ஆர்.டி.இ., திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம், இதுவரை துவங்காதது குறித்த கேள்விக்கு, அமைச்சர் மகேஷ் மழுப்பலாக பதில் அளித்தார்.
நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில், 25 சதவீத ஏழை மாணவர்களை சேர்க்கும் வகையில், ஆர்.டி.இ., என்ற இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன்படி, தனியார் பள்ளிகளில் சேரும் ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை, மத்திய, மாநில அரசுகள் பங்கிட்டு வழங்குகின்றன. அந்த மாணவர்கள் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை, இந்த கட்டணம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஒருங்கிணைந்த கல்வித் திட்டமான எஸ்.எஸ்.ஏ., செயல்பாட்டை, தேசிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு சேர்த்துவிட்டது. இருமொழிக் கொள்கை போன்ற விஷயத்தால், தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை.
இதனால், தமிழகத்துக்கான எஸ்.எஸ்.ஏ., நிதியை, மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், ஆர்.டி.இ., திட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் ஏற்கனவே படித்து வரும் ஏழை மாணவர்களுக்கான கட்டணத்தை, தனியார் பள்ளிகளுக்கு அரசு இன்னும் வழங்கவில்லை.
இதனால், பெற்றோரிடம் கட்டணத்தைக் கேட்டு, பள்ளி நிர்வாகங்கள் நெருக்கடி கொடுக்கின்றன. மேலும், புதிய ஆர்.டி.இ., சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஏப்ரல் மாதமே வினியோகித்திருக்க வேண்டும்.
ஆனால், இணையதளத்தில் அதற்கான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால், பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில்:
மத்திய அரசு, தமிழகத்துக்கான ஆர்.டி.இ., நிதியான 600 கோடி ரூபாயை நிறுத்தி உள்ளது. அந்த திட்டத்தில், தமிழகத்தில் 60,000 குழந்தைகள் பயன்பெற்ற நிலையில், தற்போது, 1 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த திட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மத்திய அரசு செயல்படுத்தும் திட்டம்.
தற்போது, அதற்கான நிதியை நிறுத்தியது, சட்டத்தை மீறுவதற்கு சமம். அந்த நிதியை விடுவிக்க, தமிழக அரசிடம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
அவற்றை ஏற்க முடியாது என்றும், கட்டாய கல்வி திட்டத்துக்கான நிதியை வழங்க வேண்டும் என்றும், பள்ளிக்கல்வித் துறை செயலரின் வாயிலாக, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். அதற்கான பதில் அடிப்படையில் முடிவெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.