பொள்ளாச்சியில் தனியார் கல்லூரி விடுதியில் கேரள மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை
கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் மனோஜ். இவரது மகன் விஷ்ணு (வயது 19). இவர் பொள்ளாச்சி திப்பம்பட்டியில் உள்ள சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரியில் மாதிரி தேர்வு முடிந்ததும் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில் அறை கதவை தட்டி பார்த்தும் திறக்காததால் அறையின் மற்றொரு சாவியை கொண்ட வந்து கதவை திறந்து, பார்த்த போது விஷ்ணு ஜன்னல் கம்பியில் துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து கோமங்கலம் போலீசார் விரைந்து வந்து போலீசார் விரைந்து வந்து விஷ்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போராட்டம்
இந்த நிலையில் நேற்று சக மாணவர்கள் விஷ்ணுவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விஷ்ணுவுக்கும், திருச்சூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே முகநூல் மூலம் கடந்த 7 மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதை தொடர்ந்து ஒருவருக்கொருவர் செல்போன் எண்களை பரிமாறி காதலை வளர்த்து வந்தனர். மேலும் இருவரும் செல்போனில் சண்டை போடுவது வழக்கம்.
விசாரணை
இந்த நிலையில் தேர்வு எழுதி விட்டு விடுதிக்கு வந்த விஷ்ணு, அந்த பெண்ணுடன் பேசியதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே சண்டை வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம்.
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் அவரது செல்போன் பதிவுகளை ஆய்வு செய்த பிறகே முழுவிவரம் தெரியவரும். இந்த நிலையில் விஷ்ணு காதலிப்பதாக கூறப்படும் பெண்ணிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.