கோவையில் பெய்து வரும் மழையால் எம்.ஜி.ஆர். மார்க்கெட் தண்ணீரில் தத்தளிக்கிறது. இதன்காரணமாக காய்கறிகள் மழையில் அழுகி வீணாகி வருகிறது.
வடகிழக்கு பருவமழை
கோவை மாவட்டம் மட்டுமின்றி கேரளாவிற்கு தேவையான காய்கறிகளை வினியோகம் செய்யும் இடமாக கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட் விளங்குகிறது.
இங்கு கோவை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மட்டுமின்றி நீலகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் இங்கு மொத்தமாக லாரிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
அதன்பின்னர் இங்கிருந்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்காரணமாக இந்த மார்க்கெட் மிக முக்கியமானதாக விளங்குகிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மார்க்கெட்டில் போதிய அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. மழை பெய்தால் மழைநீர் வடிந்து செல்ல முறையான வடிகால் வசதிகள் செய்துதரப்படவில்லை.
இதனால் ஒருநாள் மழை பெய்தாலும் இங்கு மழைநீர் தேங்கி தண்ணீரில் மார்க்கெட் தத்தளிக்கிறது.
அழுகும் காய்கறிகள்
இந்த நிலையில் கோவையில் நேற்று முன்தினம் மாலை பெய்த மழையால் மார்க்கெட் முழுவதும் மழைநீர் தேங்கி நின்றது. நேற்று காலையில் கூட மார்க்கெட்டில் மழைநீர் தேங்கியிருந்ததால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த மழைநீரில் நனைந்து ஏராளமான காய்கறிகள் அழுகி வீணாகியது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டிற்கு ஒரு நாளைக்கு 500 டன்னுக்கு மேல் வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் உள்பட பல்வேறு வகையான காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
ஆனால் போதிய அளவு மழைநீர் கட்டமைப்பு இல்லை. இதன்காரணமாக மழைநீர் தேங்கி விடுகிறது. மேலும் மார்க்கெட்டிற்குள் சாலைகள் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது.
இதனால் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. மழைபெய்தால் மார்க்கெட் சேறும், சகதியுமாக காட்சியளிப்பதால் யாரும் இங்கு பணிபுரிய முடியாத நிலை உள்ளது.
தற்போது பெய்து வரும் மழையில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் நனைந்து அழுகிவிடுகிறது.
எனவே மழைக்காலங்களில் நாங்கள் காய்கறி மூட்டைகள் மீது தார் பாய்கள் கொண்டு மூடி பாதுகாத்து வருகிறோம். எம்.ஜி.ஆர். மார்க்கெட்டை கவுண்டம்பாளையம் எருக்கம்பெனிக்கு மாற்றுவதாக இருந்தது.
ஆனால் தற்போது அங்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. எனவே இங்கு தேவையான மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் ஏற்படுத்துவதுடன், அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்றனர்.