தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பதற்கும், விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்த பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. ஆனால் அதையும் மீறி பிளாஸ்டிக் பொருட்கள் கோவையில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், கோவை மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி கடைகளில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறார்கள். இருந்தபோதிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ரகசியமாக தயாரிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் ராஜாமணி உத்தரவின் பேரில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2 நிறுவனங்களில் பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித கப்கள் மற்றும் பேரூர் மற்றும் சிங்காநல்லூரில் 3 நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பாலி புரோப்பைலின் பைகள் மற்றும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்த 5 நிறுவனங்களுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் அந்த நிறுவனங்களின் மின்இ்ணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இது குறித்து கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
காகித கப்களின் உள்ளே பிளாஸ்டிக் பூச்சு கொடுத்து தயாரிக்கப்படுகிறது. இது தடை செய்யப்பட்டதாகும். சீல் வைக்கப்பட்ட நிறுவனங்களில் எவ்வளவு பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது என்று கணக்கிடப்பட வில்லை. சீல் வைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தினர் பிளாஸ்டிக் பொருட்களை கேரளாவுக்கு விற்பதாக கூறினார்கள். ஆனால் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்க அனுமதி கிடையாததால் அந்த நிறுவனத்துக்கும் சீல் வைக்கப்பட்டு உள்ளது. இனி இதுபோன்று சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.