தங்கமானாலும் , தகரம் ஆனாலும் தரம் கண்டுபிடிக்க வந்தாச்சு ‘ஆப்’

0
4

கோவை: மார்ச் 15ம் தேதி(நேற்று) உலக நுகர்வோர் விழிப்புணர்வு தினம். இந்த நாள் நுகர்வோர் உரிமைகள் மற்றும் தேவைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் கொண்டாடப்படுகிறது.பிஐஎஸ் தரசான்று அமைப்பு சார்பில், ஐஎஸ்ஐ முத்திரை தரம் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி, கோவை மண்டல அறிவியல் மையத்தில் நேற்று நடந்தது. பொதுமக்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் என, ஏராளமானவர்கள் பார்வையிட்டனர்.

ஒரு பொருளை வாங்கும் போது, அந்த பொருளில் ஐஎஸ்ஐ முத்திரை பதிக்கப்பட்டு உள்ளதா என்பதை, பார்த்து வாங்க வேண்டும் என, மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை மதிப்பு மிக்க பொருட்களை வாங்கும் போது, ஹால்மார்க் மற்றும் தரமுத்திரையை பரிசோதித்து பார்க்கும், புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், ”அசல் போல் நகலும் இருப்பதால் பொதுமக்கள் எந்த பொருள் வாங்கினாலும், அதன் தரச்சான்று முத்திரையை பரிசோதித்து வாங்க வேண்டும். இன்றைக்கு அனைத்து பொருட்களுக்கும், ஐஎஸ்ஐ தரச்சான்று பெறவேண்டும் என்பது கட்டாயமாகும். உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு பிஐஎஸ், புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. தங்க நகைகள் வாங்கும் போதும், இந்த செயலியை பயன்படுத்தலாம்,” என்றார்.