தொடர் விலை வீழ்ச்சியால் விரக்தி அடைந்து, தக்காளிகளை விவசாயிகள் குப்பையில் கொட்டினர்.
வரத்து அதிகரிப்பு
கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் தக்காளி விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக கிணத்துக்கடவு, வடபுதூர், கல்லாபுரம், சொக்கனூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது விளைச்சல் அதிகரித்து உள்ளதால், கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில் இருந்து தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது ஒரு கிலோ தக்காளி 11 ரூபாய் 50 பைசாவிற்கு ஏலம் போனது.
கிலோவுக்கு ரூ.3.50 குறைவு
இதற்கிடையில் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் செடிகளில் காய்த்திருந்த தக்காளிகள் கடும் சேதமடைந்தன.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 8 டன் தக்காளிகள் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக 8 ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போனது. இது மாத தொடக்கத்தை விட ஒரு கிலோவிற்கு 3 ரூபாய் 50 காசு குறைவு ஆகும். இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் விரக்தி அடைந்த ஒரு சில விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த தக்காளிகளை சந்தை வளாகத்தில் உள்ள குப்பை கிடங்கு பகுதியில் கொட்டிவிட்டு சென்றனர். சிலர், தக்காளிகளை திரும்ப எடுத்து சென்றனர்.
வியாபாரிகள் வரவில்லை
இதுகுறித்து தக்காளி கமிஷன் கடைக்காரர்கள் கூறியதாவது:-
கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தொடர்ந்து தக்காளி விலை வீழ்ச்சி அடைய காரணம், தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரத்து அதிகரித்துள்ளதால், வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்ய வரவில்லை. இதனால் தற்போது கேரளா மற்றும் உள்ளூர் வியாபாரிகள் மட்டும் தக்காளிகளை வாங்கி செல்கின்றனர். மேலும் கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் விலை கிடைக்காமல் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் சிறிய ரக மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட தக்காளிகள் விற்பனையாகாததால் விவசாயிகள் அவற்றை குப்பை கிடங்கு மற்றும் புளிய மரத்தடியில் கொட்டி செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.