டைனோசர் இளவரசி

0
133

இந்திய டைனோசர் பூமியில், இளவரசியுடன் ஓர் உலா…
குஜராத்தின் கேரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குக்கிராமம் ரையோலி. நர்மதை ஆற்றின் கரையோர கிராமமான இதில் டைனோசர் படிமங்கள் யதேச்சையாக கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஏராளமான டைனோசர் முட்டைகளும், எலும்பு படிமங்களும் கண்டுபிடிக்கப்பட்டதால், “பாலசினார் பாகில் பார்க்” எனப்படும் இந்திய டைனோசர் பூங்கா உருவாக்கப்பட்டது. இதை உருவாக்க பெருமுயற்சி எடுத்தவர் ஆலியா சுல்தான் பாபி. இவரது மூதாதையர்கள் இந்தப் பகுதியின் ராஜ வம்சத்தினர் ஆவர். இவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில்தான் முதன் முதலாக டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அது முதல், டைனோசர் பூங்கா உருவான கதையை ஆலியா விவரிக்கிறார்…
“1981-ல், நான் சிறு குழந்தையாக இருந்த சமயத்தில் இந்திய புவியியல் ஆய்வாளர் குழு ஒன்று எங்கள் கிராமத்திற்கு வந்தது. மண்ணின் தன்மை, தாதுவளங்களை அளவிடுவதற்காக வந்த அந்தக்குழு, என்னவென்றே தெரியாத உருண்டை வடிவ கற்கள் மற்றும் எலும்புத் துண்டுகளை கண்டனர். அதை ஆராய்ச்சி செய்ததில் கல் உருண்டைகளாக காணப்பட்டவை டைனோசர் முட்டைகள் என்றும், வினோதமான எலும்புகள் டைனோசர்களுடையது என்றும் கண்டறிந்தனர். அதன்பிறகு அந்தப் பகுதிக்கு டைனோசர் ஆராய்ச்சியாளர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். நான் பள்ளிப்படிப்புக்காக வெளியூர் அனுப்பப்பட்டிருந்தேன்.
நான் பள்ளி முடிந்து ஊருக்கு திரும்பிய சமயத்தில், எங்கள் பகுதியில் ஏராளமான டைனோசர் படிமங்களையும், ஆயிரக்கணக்கான முட்டைகளையும் கண்டறிந்து இருந்தனர். சுமார் 7 வகையான டைனோசர் இனங்கள் இங்கு வாழ்ந்ததாக கண்டறியப்பட்டிருந்தது. அதனால் டையோலி கிராமத்தை உலகின் மூன்றாவது பெரிய டைனோசர் முட்டைக் கிடங்காக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்தனர்.
நான் பள்ளிப்படிப்பை முடித்திருந்த சமயத்தில்தான் ‌ஜூராசிக் பார்க் திரைப்படம் வெளிவந்திருந்தது. அப்போது எங்கள் பகுதியில் டைனோசர் ஆராய்ச்சி நடந்தது எனக்கு ஆர்வத்தை மேலும் தூண்டியது. அமெரிக்கா, ரஷியா, தைவான் என உலக நாடுகளில் இருந்து வரும் ஆய்வாளர்கள், ராஜ பரம்பரையான எங்கள் அரண்மனையில்தான் தங்குவார்கள், நாங்கள் நடத்தும் பெரிய ஓட்டலில்தான் சாப்பிடுவார்கள். நான் அவர்களிடம் டைனோசர் பற்றிய கேள்விகளை நிறைய கேட்டேன். ஆய்வுக்குச் செல்லும்போது அவர்களுக்கு உதவியாக இருந்து டைனோசர்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் அறிந்து கொண்டேன். டைனோசரின் பிரமாண்ட உருவம், அதன் வித்தியாசமான பழக்க வழக்கங்களை அறிந்து பிரமித்தேன். அதைப்பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கினேன். சில புதிய விஷயங்களை கண்டறிந்து, மற்ற ஆராய்ச்சியாளர்களிடம் கட்டுரையாக சமர்ப்பித்து பாராட்டு பெற்றேன்.
அரிய வரலாற்று சிறப்புமிக்க இந்தப் பகுதியை டைனோசர்களின் பூங்காவாக மாற்றும் ஆர்வம் வந்தது. குஜராத் மாநில அரசின் ஒத்துழைப்புடன் டைனோசர் பூங்கா உருவாக்கப்பட்டது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கினார்கள்.” என்கிறார் ஆலியா.
மற்ற ஆய்வாளர்களைவிட அதிகமாக ஆய்வு செய்பவராகவும், கால்நடை மேய்ப்பவர்களால் டைனோசர் படிமங்கள் சேதமடையாமல் தடுக்கவும் பெருமுயற்சி எடுத்தவராகவும் ஆலியா கருதப்படுகிறார். இந்த கிராமத்தில் ஆங்கிலம் அறிந்த ஒரே இளம் பெண் அவர்தான். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நட்புணர்வும், மகிழ்ச்சியும் ததும்ப டைனோசர்கள் பற்றி விளக்கும் சுற்றுலா வழிகாட்டியாக விளங்குகிறார். அதே நேரத்தில் கிராம மக்களிடமும் தங்கள் பகுதியின் வரலாற்று பெருமை பற்றி விளக்கி வருகிறார். இவரை டைனோசர் இளவரசி என்றே இப்பகுதி மக்கள் அழைக்கத் தொடங்கிவிட்டனர்.
புதிய டைனோசர்
2003-ம் ஆண்டில் சிகாகோ பல்கலைக்கழகம் மற்றும் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த டைனோசர் ஆய்வாளர்கள், தங்கள் ஆராய்ச்சி முடிவில் இங்கு புதிய டைனோசர் இனம் வாழ்ந்ததாக கண்டறிந்தனர். அதற்கு “ராஜசரஸ் நார்மடென்சிஸ்” என்று பெயர் சூட்டப்பட்டது. இதற்கு “நர்மதையின் ராஜ விலங்கு” என்று பொருளாகும். இந்த டைனோசர் இனம் 30 அடி உயரம் கொண்டது. சுமார் 8 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்தது.
இந்தப்பகுதியில் ஏறத்தாழ இதன் முழுமையான மண்டை ஓடுகள் கைப்பற்றப்பட்டு இணைக்கப்பட்டன. இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முழுமையான டைனோசர் மண்டை ஓடு இதுவாகும். இப்போது இந்த எலும்புக்கூடு கொல்கத்தா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.