டெல்லி அருகே தீ விபத்தில் பலரை காப்பாற்றிய பெண் பலி

0
93

புதுடெல்லி,

டெல்லி அருகே உள்ள குர்கான் நகரில் 10 மாடிகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு குபு குபுவென புகை வெளியேறியது.

அப்போது 5-வது மாடியில் உள்ள தனது வீட்டில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த 32 வயது சுவாதி கார்க் என்ற பெண் கட்டிட வடிவமைப்பாளர் தீவிபத்து ஏற்பட்டு இருப்பதை உடனடியாக உணர்ந்து கொண்டார். இதையடுத்து மின்னல் வேகத்தில் செயல்பட்ட அவர் ஒவ்வொரு தளத்தில் வசிப்பவர்களையும் தட்டி எழுப்பி மேல் தளத்துக்கு செல்ல அறிவுறுத்தினார். அவர்களும் வீட்டை விட்டு வெளியேறி மொட்டை மாடிக்கு சென்றனர். அதேபோல் சுவாதியின் கணவரும், குழந்தையுடன் மொட்டை மாடிக்கு சென்று உயிர் தப்பினார்.

இந்த தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைக்கும் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதற்கிடையே வெகு நேரமாகியும் சுவாதி கார்க் மட்டும் மொட்டை மாடிக்கு வரவில்லை. இதுபற்றி தீயணைக்கும் படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சுவாதி கார்க்கை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 10-வது மாடியில் பூட்டப்பட்டிருந்த ஒரு வீட்டின் கதவு அருகே அவர் இறந்த நிலையில் கிடந்தார்.

பலரை பாதுகாப்பாக அப்புறப்படுத்திவிட்டு கடைசி நபராக அவர் மொட்டை மாடிக்கு செல்ல முயன்றுள்ளார். ஆனால், அவர் அங்கிருந்த கதவை திறக்க முடியாததால் புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிர் இழந்துவிட்டார்.

பல உயிர்களை காப்பாற்றுவதற்காக ஒரு பெண் தன்னுயிரை இழந்த சம்பவம் டெல்லியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.