கோவை; ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ இதழ் சார்பில் நடந்த, ‘பதில் சொல்; பரிசை வெல்’ வினாடி-வினா போட்டியில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பதிலளித்து அரையிறுதிக்கு முன்னேறினர்.
‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பு ‘பட்டம்’ இதழ் சார்பில், மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தவும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் விதமாகவும் கடந்த, 2018ம் ஆண்டு முதல் ‘வினாடி-வினா’ போட்டி, நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான ‘வினாடி- வினா விருது, 2024-25’ போட்டி, ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் கடந்த அக்., 8ம் தேதி துவங்கியது. இவர்களுடன், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும், கரம் கோர்த்துள்ளது.
‘கோ-ஸ்பான்சர்’ ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில், பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, அரையிறுதி போட்டி நடக்கும்.
இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்படவுள்ளன. சரவணம்பட்டி, ரூபி மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்த வினாடி- வினா போட்டியில், 45 பேர் தகுதி சுற்றுக்கான, பொது அறிவுத்தேர்வு எழுதினர்.
அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில், ‘டி’ அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவியர் ரேஷ்மா, பிரினிதா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் கற்பகஜோதி, துணை முதல்வர் ஹேமபிரியா ஆகியோர் பரிசுகள் வழங்கினர். போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜபிரபா, சண்முகப்பிரியா, ஆசிரியர் ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
அதேபோல், டாக்டர் பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 143 பேர் தகுதிச்சுற்றுக்கான பொது அறிவித்தேர்வு எழுதினர். போட்டிகளின் நிறைவில், ‘எச்’ அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் அவிநவ், மாணவி சுபிக் ஷா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளி முதல்வர் வெங்கடேஷ்வரன் பரிசுகள் வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் திலகவதி, ஆசிரியர்கள் பூங்கொடி, சங்கீதா ஆகியோர் உடனிருந்தனர்.
அங்கப்பா சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியில், 45 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர்.
நிறைவில், ‘ஏ’ அணியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர்கள் யஸ்வந்த், அகில் கிருஷ்ணா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளியின் முதன்மை முதல்வர் நவமணி, முதல்வர் பிருந்தா பிரேமகுமாரி, துணை முதல்வர் சரோஜா ஆகியோர் பரிசுகள் வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் வசந்தமல்லிகா, ஆசிரியர்கள் ஆனந்தி, சந்திரபிரபா ஆகியோர் உடனிருந்தனர்.