கோவை: கோவை மாநகராட்சி சார்பில், இடையர்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்திலும், இடையர்பாளையம் சந்திப்பு பகுதியிலும், ஜெர்மன் தொழில்நுட்பத்தில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
கோவை ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டச்சாலையில், மழைக்காலத்தில் ரோட்டில் தண்ணீர் வழிந்தோடியது. அதை நிலத்துக்குள் கொண்டு செல்லும் வகையில், ஜெர்மன் தொழில்நுட்பத்தில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டது.
ரோட்டில் ஆறு போல் வழிந்தோடி வந்த மழை நீர், சற்று நேரத்தில் நிலத்துக்குள் இறங்கியது. அதனால், எந்தெந்த இடங்களில் மழை நீர் தேங்குகிறது என்பதை அடையாளம் கண்டு, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த, மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக, 35வது வார்டு இடையர்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்திலும், இடையர்பாளையம் சந்திப்பு பகுதி ரோட்டிலும், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்படுகிறது.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் நேற்று செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேயர், கலெக்டர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
பள்ளி வளாகத்தில் பெய்யும் மழை நீர், நிலத்துக்குள் எவ்வாறு கீழிறங்கும் என்பதை மாநகராட்சி கமிஷனர் விளக்கினார். இடையர்பாளையம் சந்திப்பில் ரோட்டில் துளையிட்டு, மழை நீரை கீழிறக்கும் கட்டமைப்பு அமைக்கப்படுகிறது.