ஜல்லிக்கட்டு தடைக்கு ஸ்டாலின் தான் காரணம் – துணை முதல்வர் பிரச்சாரம்

0
117
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம், ஜெ.கிருஷ்ணாபுரத்தில் சூலூர் தொகுதியில் போட்டி யிடும் அ.தி.மு.க.வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை திறந்த வேனில் பிரசாரத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து செஞ்சேரி பிரிவில் அவர் பேசும்போது கூறியதாவது:-
இந்த பகுதியில் உள்ள மக்களுடைய தேவைகளை நன்கு அறிந்த, கந்தசாமி வேட்பாளராக நிறுத்தப் பட்டு உள்ளார். அவர் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை கொண்டு வந்து சேர்க்கும் நல்ல சட்டமன்ற உறுப்பினராக செயல்படுவார் என்பதை தெரிவிக்கிறேன். 2011-ம் ஆண்டு தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து பொற்கால ஆட்சி நடத்தினார். அவரது ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட தொலை நோக்கு திட்டங்களை இன்று மக்களின் கரங்களுக்கு நேரடியாக கொண்டு செல்லும் ஆட்சி நடந்து வருகிறது. 100 ஆண்டுக்கு பிறகும் எதிர்கால சந்ததிகளும், பயன்பெற பார்த்து, பார்த்து தொலை நோக்கு திட்டங்களை அவர் தந்தார்.
குருவிக்குக்கூட வீடு இருக்கிறது. ஆனால் மனிதர்களுக்கு வீடு இல்லை என்கிற ஏக்கம் இருக்க கூடாது என்பதற்காக ஏழை, எளிய மக்களுக்கு உறுதியான கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறி வித்தார். இதன்படி 2023-ம் ஆண்டுக்குள் குடிசை பகுதியில் வாழும் 14 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித்தர உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி அனைத்து குடிசை பகுதி மக்களுக்கும் இன்றுவரை 6 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. உறுதியாக 2023-ம் ஆண்டுக்குள் தரமான, உறுதியான கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். பெண்கள் நாட்டின் கண்கள் என்றார் ஜெயலலிதா. அவர்களுக்கு முழு பாதுகாப்பு, நல்வாழ்வுக்கு, நலத்திற்கு வழங்க எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார். அவரது அரசு இன்றைக்கும் மக்களுக்கு திட்டங்களை கொண்டு வந்து சேர்க்கிறது. எதிர்க்கட்சி பிரசாரம் செய்யும்போது அவரது ஆட்சியில் செய்த திட்டங்களை சொல்லலாம். ஆனால் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. அதனால்தான் அவர்கள் அதனை சொல்வதில்லை. அ.தி.மு.க. அரசு கவிழ்ந்து விடும் என்றுதான் தி.மு.க. பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். எதிர்க்கட்சியாக உள்ள நிலையிலும் தி.மு.க. அராஜகத்தை கைவிடாத நிலையில் உள்ளது.
அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட தொண்டர்கள் இயக்கம். அவருக்கு பின்பு கழக பொதுச்செயலாளர் பொறுப்பேற்று 1½ கோடி தொண்டர்களை உருவாக்கி தந்துள்ளார்கள். ஆகவே அ.தி.மு.க. ஆலமரம். தமிழகம் முழுவதும் பரந்து, விரிந்து கிடக்கிறது. இதன் விழுதுகளாக தொண்டர்கள் உள்ளனர். ஆகவே இதனை ஆட்டவோ? அசைக்கவோ யாராலும் முடியாது. அ.தி.மு.க.வை வீழ்த்த கருணாநிதியால் முடியாதது ஸ்டாலினால் முடியுமா? மு.க. ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்-அமைச்சராக முடியாது. தி.மு.க.ஆட்சியில்தான் வன்முறை கலாசாரம் இருந்தது. அ.தி.மு.க. அரசு மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்பட்டது. இதனால் தங்கச்சிமார், தனது அண்ணன்மார்களை அதன் பின்னால் அமர்த்தி செல்கின்றனர். இதன் மூலம் தந்தை பெரியார் கண்ட கனவு நனவாகிறது. ஆணுக்கு பெண் சமம் என்கிற நிலையை ஜெயலலிதா உருவாக்கி தந்துள்ளார்.
2014-ம் ஆண்டில் எப்படியும் முதல்-அமைச்சராக வேண்டும் என்கிற தீராத ஆசையால், மு.க.ஸ்டாலின் ஒரு ஜோசியக்காரனிடம் சென்று ஜோசியம் கேட்டு, அவர் சொன்னபடி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலர், கலர் சட்டையாக போட்டு சென்றார். சைக்கிளில் வந்தார். நடந்து வந்தார். டீக்கடைக்கு சென்று டீ குடித்தார். அவர் டீதான் குடித்தார். ஆனால் டீக்கடையை நடத்தியவர் நாம். ஆகவே ஸ்டாலின் பாச்சா பலிக்காது. மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வது நமது ஆட்சி. மக்களிடம் இருந்து அ.தி.மு.க.வைபிரிக்க முடியாது. அவர்களுக்கு நல்ல திட்டங்களை தரும் கடமையை ஏற்று இருக்கிறோம். ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனதும், சட்ட போராட்டம் நடத்தி காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்றுத்தந்தார். ஆனால் ஆட்சியில் இருந்த தி.மு.க., காங்கிரஸ் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஜல்லிக்கட்டு நமது பாரம்பரிய விளையாட்டு. தி.மு.க.ஆட்சியில் விலங்கினபட்டியலில் காளையை சேர்த்ததால்தான் ஜல்லிக்கட்டுக்கு கோர்ட்டு தடைவிதித்தது. ஆனால் பல்லாயிரக்கணக்கானோர் அந்த வீரவிளையாட்டு நடைபெற வேண்டும் என்று திரண்டபோது, முதல்-அமைச்சராக இருந்த நான், பிரதமர் மோடியிடம் எடுத்து சொன்னேன். அதற்கு அவர் இது தமிழர்களின் வீர விளையாட்டா? என்று ஆச்சரியப்பட்டு, ஒரே நாளில் 4 துறைகளின் அனுமதியை பெற்று தந்தார். இதனால் தடை விலக்கப்பட்டு ஜல்லிக்கட்டு ஜம் என்று நடந்து வருகிறது. ஆகவே மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் அரசாக ஜெயலலிதா அரசுதான் திகழ்கிறது.
சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான். ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை விரைவில் உறுதியாக செயல்படுத்துவோம். அந்த திட்டத்தின் பயன் இந்த பகுதி மக்களுக்கு வந்து சேரும். விலையில்லாத ஆடு, மாடு, நாட்டுக்கோழிகள் பயனாளிகளுக்கு தேர்தல் முடிந்ததும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தின்போது அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மகேந்திரன் எம்.பி, முன்னாள் அமைச்சர்கள் பா.வெ.தாமோதரன், கிணத்துக்கடவு தாமோதரன், வால்பாறை அமீது, அமுல் கந்தசாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.
முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் பேசிக்கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் வேன் ஒன்று வந்தது. உடனே அதற்கு வழிவிடும்படி அவர் கேட்டுக்கொண்டார். இதனால் கூட்டத்தில் இருந்த பொதுமக்களும், தொண்டர்களும் விலகி அதற்கு வழிவிட்டனர்.