கோவை; தமிழ்நாடு வேளாண் பல்கலையின், அனைத்து உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப தயாரிப்புகள் 2025 ஜன.,1ம் தேதி, அக்ரிகார்ட் இணையதளம் வழியாக, விற்பனை செய்யப்படவுள்ளதாக, டீன் ரவீந்திரன் தெரிவித்தார்.
2023 ஏப்., மாதம் வேளாண் விளை பொருட்களை நேரடியாக பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும், ‘அக்ரிகார்ட்’ எனும் ஆன்லைன் வர்த்தகம் துவக்கப்பட்டது.
ஆரம்பத்தில், 30 பொருட்களுடன் துவக்கப்பட்ட வர்த்தகத்தில் தற்போது, 200 பொருட்கள் விற்பனைக்கு இணைக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் விற்பனைக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இணையதளத்தை பல்கலை நிர்வாகம் மேம்படுத்தியுள்ளது. பல்கலை தரப்பில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் இணையதளம் வாயிலாக மட்டுமே விற்க, பல்கலை நிர்வாகம்
திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, வேளாண் பல்கலை டீன் ரவீந்திரன் கூறியதாவது
அக்ரிகார்ட் இணையதள செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளோம். முதலில் கார்டு மட்டுமே வைத்து ஆர்டர் செய்ய இயலும். தற்போது, கார்டு, யு.பி.ஐ., நெட் பேங்கிங், செயலிகள், கேஷ் ஆன் டெலிவரி என அனைத்தும் கொண்டு வந்துள்ளோம்.
எதிர்வரும், ஜன., 1ம் தேதி முதல் வேளாண் பல்கலையின் அனைத்து விற்பனையும் இதன் வாயிலாக மட்டுமே நடைபெறும்.
ஆன்லைன் முறை தெரியாத விவசாயிகள், நேரடியாக கொள்முதல் செய்ய வந்தாலும், இதன் வழியாகவே பதிவு செய்து வழங்கப்பட வேண்டும். அதுசார்ந்த பயிற்சி அனைத்து துறையினருக்கும் கொடுத்து விட்டோம். கண்காணிப்பும் எளிதாக இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
உழவர் உற்பத்தி
”பல்கலை கட்டுப்பாட்டில், 120 உழவர் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இவர்களின் தயாரிப்பு பொருட்களையும் இதில் கொண்டு வர, பணிகள் நடக்கின்றன.பொருட்களின் தரம் சரியாக இருக்க வேண்டும். அதனை ஆய்வு செய்து, இதனுள் கொண்டுவர உள்ளோம். பல்கலை வேளாண் வர்த்தக மையத்தில், பதிவு செய்த தொழில்முனைவோரின் பொருட்களையும், விற்பனைக்கு கொண்டு வருகிறோம்.