கோவை; ”ஜனநாயகம் சுமையல்ல, அது நம் பலம்,” என, சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தேசிய இணை அமைப்பாளர் சதீஸ்குமார் பேசினார்.
சுதேசி விழிப்புணர்வு இயக்கம்(எஸ்.ஜே.எம்.,) சார்பில், வடகோவை குஜராத் சமாஜில்,இளைஞர்கள் மற்றும் பெண்கள்,தொழில் முனைவோர் ஆவதற்கான திறமைகளை வளர்ப்பது குறித்த இரண்டு நாட்கள் கருத்தரங்கு நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது.
நேற்று நடந்த 2047ல் பாரதம் எனும் கருத்தரங்கில் எஸ்.ஜே.எம்., தேசிய இணை அமைப்பாளர் சதீஷ்குமார் பேசுகையில்,”பிரிட்டிஷ் ஆட்சியில் இந்திய வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. வளர்ந்த நாடு என்ற சிந்தனை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய குடும்ப அமைப்பு போல் வேறு எங்கும் கிடையாது. வரும், 2047 ல் பொருளாதாரத்தில் மட்டுமல்ல அனைத்திலும் வல்லமை பெற்ற நாடாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நமக்கு தேவை துடிப்பான ஜனநாயகம்.
இந்தியாவில் இளைஞர்கள் பலம் இருப்பதால், மொத்த உள்நாட்டு உற்பத்தி எப்போதும் குறையாது. ஜனநாயகம் சுமையல்ல, அது நம் பலம். வரும், 2047 ல் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற இளைஞர்களால் தான் முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக எஸ்.ஜே.எம்., மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் வரவேற்றார். சீதாலட்சுமி ஸ்டீல் காஸ்டிங்ஸ் நிர்வாக இயக்குனர் ராமசாமி தலைமை வகித்தார். எஸ்.ஜே.எம்., மாநில அமைப்பாளர் சத்தியநாராயணா, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.