சோலையாறு அணையின் நீர்மட்டம் 22 அடியாக குறைந்தது

0
61

கடுமையான வெயில்

வால்பாறை பகுதியில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் ஆறுகள், நீரோடைகளில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது.

மேலும் வெயிலின் காரணமாக பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் சோலையாறு அணையிலும் நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. தற்போது சோலையாறு அணையின் நீர்மட்டம் 22 அடியாக உள்ளது. கடல்போல் காட்சியளித்த சோலையாறு அணை தற்போது, குட்டைப்போல் காட்சியளிக்கிறது. இதே கடந்த ஆண்டு மார்ச் மாதம் அணையின் நீர்மட்டம் 75 அடியாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அணையின் நீர்மட்டம் குறைந்தது

இந்த ஆண்டு முன்கூட்டியே வெயில் காலம் தொடங்கி விட்டதால், சோலையாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் பிப்ரவரி மாதத்திலேயே மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் ஜூலை மாதத்திற்கு பிறகு தான் மின் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால் தான் அங்கிருந்து மின்உற்பத்தி செய்யப்பட்டு ஆழியாறு அணைக்கு தண்ணீர் கொடுக்க முடியும். ஆனால் இந்த ஆண்டு அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதனால் ஆழியாறு அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

தேயிலை செடிகள்

வருகிற நாட்களில் வழக்கத்திற்கு மாறாக கூடுதல் வெப்பநிலை நிலவும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. வால்பாறை பகுதியில் பகல் நேர வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்சாக இருந்து வருகிறது.

வால்பாறை பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருவதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும் தேயிலை தோட்ட நிர்வாகங்கள் தேயிலை செடிகளை பாதுகாக்க தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.