சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

0
94

வால்பாறையில் கனமழை: சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

வால்பாறையில் பெய்த கனமழையால் சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

4-வது நாளாக கன மழை

வால்பாறை பகுதியில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. இதனால் வால்பாறை பகுதியில் உள்ள ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை கடந்த மாதம் 10-ந் தேதி தனது முழு கொள்ளளவை தாண்டியது. இதனால் உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் 4-வது நாளாக பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணையின் நீர்மட்டம் மீண்டும் 162 அடியை தாண்டியது. வால்பாறை பகுதி முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்து வந்ததை தொடர்ந்து வால்பாறையில் உள்ள தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

வெள்ளப்பெருக்கு

இந்த நிலையில் வால்பாறை பகுதி முழுவதும் விட்டு விட்டு லேசான மழை பெய்து வந்தது. வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் சோலையாறு அணைக்கு வினாடிக்கு 3,259 கன அடிநீர் வந்தது. மின்நிலையங்கள் மற்றும் சேடல்பாதை வழியாக 2,528 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேல்நீரார் அணையிலிருந்து 1,269 கன அடித் தண்ணீரும், கீழ் நீரார் அணையிலிருந்து 142 கன அடித் தண்ணீரும் சோலையாறு அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும், 2, 362 கன அடித் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது

மேலும், சோலையாறு அணையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள வனப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதனால் வால்பாறை வழியாக கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி சுற்றுலா பயணிகள் செல்வதற்கு 5 நாட்களுக்கு தடைவிதித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

மழை அளவு
மளுக்கப்பாறை வரை இயக்கப்படும் கேரள மாநில அரசு பஸ் மற்றும் சாலக்குடியிலிருந்து வால்பாறைக்கு வரக்கூடிய தனியார் பஸ் மட்டும் இயக்கப்படுவதற்கு கேரள அரசு அனுமதியளித்துள்ளது.

கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில நாட்களாக பகலில் பொதுமக்களை வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இதமான சாரல் மழை பனிபோல் பெய்து வந்தது.இதனால் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதி முழுவதும் குளிர்ச்சியாக காணப்பட்டது.

இதற்கிடையில் சோலையார், பரம்பிக்குளம், மேல்நீராறு, கீழ்நீராறு, வால்பாறை, பெருவாரிபள்ளம் ஆகிய இடங்களில் ஒரே நாளில் 100 மி.மீ. மேல் மழை பதிவாகி உள்ளது. பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

சோலையார் 116 மி.மீ., பரம்பிக்குளம் 126 மி.மீ., ஆழியாறு 38.6 மி.மீ., திருமூர்த்தி 1 மி.மீ., வால்பாறை 109 மி.மீ., மேல்நீராறு 131 மி.மீ., கீழ்நீராறு 110 மி.மீ., காடம்பாறை 37 மி.மீ., சர்க்கார்பதி 40.4 மி.மீ., வேட்டைக்காரன்புதூர் 21 மி.மீ., மணக்கடவு 55 மி.மீ., தூணக்கடவு 89 மி.மீ., பெருவாரிபள்ளம் 110 மி.மீ., அப்பர் ஆழியாறு 50 மி.மீ., நவமலை 27 மி.மீ., பொள்ளாச்சி 12 மி.மீ., நல்லாறு 18 மி.மீ., நெகமம் 6 மி.மீ.